செய்யாறு பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டம் தமிழக அரசு தீவிர பரிசீலனை

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பை நிறைவேற்ற திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் பசுமை வழி விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு தீவிர பரிசீலனை செய்து வருகிறது.
செய்யாறு பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டம் தமிழக அரசு தீவிர பரிசீலனை
Published on

சென்னை,

சென்னை பெருநகரில் விமான போக்குவரத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. மேலும் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு பெறு நிறுவனங்கள் பல கோடிக்கணக்கான முதலீட்டில் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையை சுற்றியுள்ள பகுதிகளிலும், சென்னைக்கு அருகில் உள்ள மாவட்டங்களிலும் தொழிற்சாலைகளை அமைத்து வருகின்றன.

மேலும் பல முன்னணி தொழில் நிறுவனங்கள் சென்னையை சுற்றியுள்ள இடங்களில் தங்கள் தொழிற்சாலைகளை அமைக்க திட்டமிட்டுள்ளன. இதன் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளன. இவர்களுக்கு எல்லாம் விமான வசதி மிகவும் அவசியமான ஒன்றாகும்.

தற்போது உள்ள விமான நிலையம் முழு அளவில் இயங்கி வருவதால் 2-வது ஒரு விமான நிலையம் அமைக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அடுத்து 30 ஆண்டு காலத்துக்கான தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஆண்டுக்கு 10 கோடி பயணிகளை கையாளும் திறன் கொண்ட ஒரு பசுமை வ ழி பன்னாட்டு விமான நிலையம் என்பது மிக முக்கிய தேவையாக இருக்கிறது.

மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்தநாள் விழாவின்போது, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை அருகே புதிதாக ஒரு பசுமை வழி விமான நிலையம் அமைக்கப்படும் என அறிவித்தார். இந்த திட்டத்துக்காக காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூரை மையமாக கொண்டு காஞ்சீபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. இப்போது அங்கு எந்த பணிகளும் நடைபெறவில்லை.

அந்த இடத்துக்கு பதிலாக திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் விமான நிலையம் அமைப்பதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். செய்யாறு பகுதியில் எந்த இடத்தில் இடங்களை கையகப்படுத்தினால் 2-வது விமான நிலையம் அமைக்க ஏதுவாக இருக்கும் என்ற வகையில் அதிகாரிகள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

மேலும் ஏற்கனவே பார்த்த இடத்தை விட மிக குறைந்த விலையில் வசதியான நிலம் கண்டறியப்பட்டு உள்ளதால் செய்யாறு பகுதியில் பசுமை வழி விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை நிறைவேற்ற அதிகாரிகள் தீவிர பரிசீலனை செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com