நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் மீது வழக்குப்பதிவு

இன்ஸ்டா பிரபலம் மீனாட்சி கைது செய்யப்பட்டார்.
நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் மீது வழக்குப்பதிவு
Published on: 

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நகைக்கடை கொள்ளை

மதுரை பழங்காநத்தம் - காளவாசல் பைபாஸ் சாலை நேரு நகர் பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட நகைக்கடையில் கடந்த 12ம் தேதி அதிகாலை பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

இந்த கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான நிஷாந்த் (வயது 25), அவரது காதலியும் இன்ஸ்டா பிரபலமுமான மீனாட்சி (வயது 23), நிஷாந்தின் தந்தை (50) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், கொள்ளையடிக்கபட்ட ரூ. 15 கோடி மதிப்புள்ள தங்க , வைர நகைகளை போலீசார் மீட்டனர்.

சாட்டை துரைமுருகன் வீடியோ

இதனிடையே, மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட இன்ஸ்டா பிரபலம் மீனாட்சி தவெக கட்சியை சேர்ந்தவர் என்று குற்றஞ்சாட்டி நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளரும், யூடியூபருமான சாட்டை துரைமுருகன் வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ வைரலானது.

வழக்குப்பதிவு

இந்நிலையில், தவெகவுக்கும், இன்ஸ்டா பிரபலம் மீனாட்சிக்கும் தொடர்பு இல்லாத நிலையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் வதந்தி பரப்புவதாக சென்னை ஆலந்தூரை சேர்ந்த தவெக நிர்வாகி நந்தகுமார் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் சாட்டை துரைமுருகன் மீது பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துதல், கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் உள்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X