

நீலகிரி,
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே பேருந்துக்குள் குரங்குகள் கூட்டம் புகுந்து பயணிகளை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே தமிழகம் - கேரளம் எல்லையில் வனப்பகுதியையொட்டி பாட்டவயல் என்ற கிராமம் உள்ளது. இங்கிருந்து கேரளம் மாநிலம் சுல்தான்பத்தேரிக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கூடலூர் வழியாக கேரளத்திற்கு செல்லும் அனைத்து வாகனங்களும் பாட்டவயல் வழியாகத்தான் செல்கின்றன.
இந்த நிலையில் சுல்தான்பத்தேரியில் இருந்து பாட்டவயலுக்கு வந்த கேரள அரசு பேருந்து பயணிகள் ஏறுவதற்காக சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பேருந்து டிரைவரும், கண்டக்டரும் அருகில் உள்ள கடைக்கு சென்றதாக தெரிகிறது. பேருந்தில் பெண் உள்பட 2 பேர் அமர்ந்து இருந்தனர். அப்போது திடீரென எங்கிருந்தோ வந்த குரங்குகள் கூட்டம் பேருந்துக்குள் புகுந்தது. அந்த குரங்குகள் நாங்களும் சீட் போடத்தான் வந்து இருக்கிறோம் என்பது போல, சீட்டில் அங்கும், இங்கும் தாவி அட்டகாசம் செய்தன.
திடீரென ஒரு கட்டத்தில் பேருந்தில் இருந்த பயணிகளை சீண்டியது. குரங்குகள் கூட்டமாக வந்ததால் அவர்கள் என்ன செய்வது என்று அறியாமல் உடனடியாக பேருந்தில் இருந்து கீழே இறங்க முயற்சித்தனர். அவர்களை குரங்குகள் விரட்டியதால் கூச்சல் போட்டனர்.
இதனை பார்த்த பேருந்தின் டிரைவர், கண்டக்டர் மற்றும் அங்கிருந்தவர்கள் மரக்குச்சிகளுடன் வந்து குரங்குகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். குரங்குகள் அவர்களை நோக்கி சீண்டியது. அவர்கள் விடாமல் குரங்குகளை துரத்தினர். சிறிது நேரத்தில் பேருந்தில் இருந்த குரங்குகள் அருகில் உள்ள வனப்பகுதிக்குள் ஓடின. இதையடுத்து பயணிகள் நிம்மதி அடைந்தனர்.
அதன் பின்னர் டிரைவரும், கண்டக்டரும் பேருந்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டு சுல்தான்பத்தேரிக்கு புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.