

நாகை,
தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த 23-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. நாகை மாவட்டத்தில் உள்ள நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேளாங்கண்ணி ஆகிய 3 சட்டசபை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. இவ்வாறு 3 சட்டசபை தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று (திங்கட் கிழமை) காலை 8 மணிக்கு எண்ணப்படுகின்றன.
நாகை சட்டசபை தொகுதியில் பதிவான வாக்குகள் நாகை கலை கல்லூரியின் முதல் தளத்திலும், கீழ்வேளூர் சட்டசபை தொகுதியில் பதிவான வாக்குகள் முதல் தளத்திலும், வேதாரண்யம் சட்டசபை தொகுதியில் பதிவான வாக்குகள் இரண்டாம் தளத்திலும் வைக்கப்பட்டுள்ளது. நாகை சட்டசபை தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு 14 மேஜைகள் போடப்பட்டுள்ளது. இதில் பதிவான வாக்குகள் 18 சுற்றுகளாக எண்ணப்பட உள்ளது.
கீழ்வேளூர் சட்டசபை தொகுதிக்கு 16 மேஜைகள் போடப்பட்டுள்ளது. இங்கு பதிவான வாக்குகள் 14 சுற்றுகளாக எண்ணப்படுகிறது. வேதாரண்யம் சட்டசபை தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ண 14 மேஜைகள் போடப்பட்டுள்ளது. எனவே இந்த தொகுதியில் பதிவான வாக்குகள் 18 சுற்றுகளாக எண்ணப்படவுள்ளது. எனவே 3 சட்டசபை தொகுதிகளில் பதிவான வாக்குகள் 50 சுற்றுகளாக எண்ணப்படவுள்ளது.
இந்த நிலையில், நாகை மாவட்டம் புத்தூர் பகுதியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு விஜய் முகம் பொறித்த சட்டை அணிந்து வந்த தவெக முகவர் வெளியேற்றப்பட்டார். உடையை மாற்றிவிட்டு வருமாறு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.