நாகை: வேளாங்கண்ணி பேராலய திருவிழாவில் வெடித்து சிதறிய ஹீலியம் பலூன்; 2 பேர் படுகாயம்

தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
நாகை
Published on

நாகை

நாகை வேளாங்கண்ணி பேராலய திருவிழாவில் ஹீலியம் பலூன் வெடித்து சிதறியதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணியில் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. 'கீழ்திசை நாடுகளின் லூர்து நகரம்' என அழைக்கப்படும் இங்கு ஆண்டுதோறும் பெருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டுக்கான பெருவிழா நேற்று (சனிக்கிழமை) மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக மாலை 5.45 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் கொடியை புனிதம் செய்து வைத்த பின், கொடி ஊர்வலம் புறப்பட்டது. பின்னர், கொடிக்கம்பத்தில் தஞ்சை மறைமாவட்ட ஆயர் சகாயராஜ் கொடி ஏற்றினார்.

ஹீலியன் பலூன்

இந்த நிலையில், வேளாங்கண்ணி கொடியேற்ற திருவிழாவில் பட்டாசுகள் பட்டு பெரிய அளவிலான அலங்கார ஹீலியன் பலூன் வெடித்து சிதறியது. இதில் பக்தர்கள் மத்தியில் தீப்பற்றி எரிந்தபடி பலூன் விழுந்தது. இந்த சம்பவத்தில் சென்னையை சேர்ந்த இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் திருவிழாவில் பக்தர்கள் இடையே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com