

நாகப்பட்டினம்,
நாகப்பட்டினம் - இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. 30 கிலோ வரையிலான சுமைகளை இலவசமாக எடுத்து செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் - இலங்கை காங்கேசன்துறை இடையே பயணிகள் கப்பல் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகிறது. சுமார் 3 முதல் 4 மணி நேரம் பயணிக்கும் இந்த கப்பல் சேவை வாரத்துக்கு 6 நாட்கள் (செவ்வாய்க்கிழமை தவிர) இயக்கப்படுகிறது. நாகப்பட்டினத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு செல்லும் ஒரு நபருக்கு 10 கிலோ வரை இலவசமாக பொருட்களை எடுத்துச்செல்ல அனுமதிக்கப்பட்டது.
அதேசமயம் காங்கேசன்துறையில் இருந்து நாகப்பட்டினத்துக்கு ஒரு நபருக்கு 15 கிலோ வரை இலவசமாக பொருட்களை எடுத்துச்செல்ல அனுமதிக்கப்பட்டு வந்தது. இலவச அளவை தாண்டி கூடுதல் பொருட்கள் எடுத்து செல்ல விரும்பினால் அதற்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டும். அதன்படி 5 கிலோ கூடுதல் எடைக்கு ரூ.1,000-ம், 10 கிலோ கூடுதல் எடைக்கு ரூ.1,500-ம், 30 கிலோ கூடுதல் எடைக்கு ரூ3,750-ம், 60 கிலோ கூடுதல் எடைக்கு ரூ.7,500-ம் வசூலிக்கப்பட்டு வந்தது. அதன்பிறகு 22 கிலோ வரை கூடுதலாக லக்கேஜ் எடுத்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த கப்பலில் பயணம் செய்வதற்கான கட்டணம் தற்போது குறைக்கப்பட்டுள்ளது. மேலும் பொருட்கள் எடுத்துச்செல்லும் எடையிலும் சலுகை வழங்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து கப்பல் போக்குவரத்து நிறுவன முதன்மை வணிக அலுவலர் சிவராம் நாகப்பட்டினத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
இந்தியா - இலங்கை இடையே நல்லுறவை மேம்படுத்தும் விதமாக தொடங்கப்பட்ட கப்பல் போக்குவரத்து சேவை சிறப்பாக நடந்து வருகிறது. கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்ட இரண்டரை ஆண்டுகளில் 2 நாடுகளுக்கு இடையே 55,310 பயணிகள் ஆன்மிகம், சுற்றுலா, வணிக ரீதியாக பயணம் மேற்கொண்டுள்ளனர்.
பயணிகளின் கோரிக்கையை ஏற்று பண்டிகை கால சலுகையாக ‘சுபம்' கப்பல் நிறுவனம் ஒரு வழி பயண கப்பல் போக்குவரத்து கட்டணத்தை ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.5,500 ஆக குறைத்துள்ளது. அதாவது ரூ.500 கட்டணம் குறைக்கப்பட்டு இருக்கிறது. பயணிகள் 30 கிலோ வரை லக்கேஜ்களை இலவசமாக எடுத்து செல்லலாம். வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கும் நாட்களை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் கப்பல் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.