டாக்டர் முன்னிலையில் நாகேந்திரன் உடல் பிரேத பரிசோதனை: ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவு

நாகேந்திரன் மரணம் தொடர்பாக புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை,
சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் நாகேந்திரன் (வயது 52). ஏ பிளஸ் ரவுடியான இவர் வியாசர்பாடி பகுதியில் ரவுடிகள் மத்தியில் நாகு என்றும், பெரியவர் என்றும் அழைக்கப்பட்டார். இவர் மீது 5 கொலை வழக்குகள், 14 கொலை முயற்சி வழக்குகள் உள்ளிட்ட 26 வழக்குகளை போலீசார் பதிவு செய்தனர்.
இவற்றில் பெரும்பாலான வழக்குகளில் இவர் கோர்ட்டு மூலம் விடுதலை பெற்றுவிட்டார். பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் நாகேந்திரனும் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டார். அவர் மீது கோர்ட்டில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. தற்போது இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு கோர்ட்டு மூலம் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
1997-ம் ஆண்டு ஸ்டான்லி சண்முகம் என்ற அ.தி.மு.க பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் நாகேந்திரனுக்கு ஆயுள்கால சிறை தண்டனை அளிக்கப்பட்டது. அதன்படி, அவர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவ்வப்போது பரோலில் வெளியில் வந்து செல்வார்.
சிறையில் இருந்தபடியே இவர் தனது கூட்டாளிகள் மூலம் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாகவும் இவர் மீது புகார்கள் கூறப்பட்டன. இவருக்கு 2 மனைவிகள். இவரது மூத்த மகன் அஸ்வத்தாமன் காங்கிரஸ் கட்சியில் முக்கிய பிரமுகர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவரும் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டு, தற்போது புழல் சிறையில் உள்ளார். இவரது 2-வது மகன் அஜித்ராஜ் பா.ஜனதாவில் முக்கிய நிர்வாகி. இவரது மகள் ஷாலினி டாக்டராக உள்ளார். ஆரம்பத்தில் கள்ளச்சாராய தொழில் செய்து வந்த நாகேந்திரன் பின்னர் ரவுடியாகவும், தாதாவாகவும் மாறி பெரிய அளவில் பேசப்பட்டவர்.
புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாகேந்திரன் சமீபத்தில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இவருக்கு கல்லீரலில் பாதிப்பு இருப்பதை டாக்டர்கள் கண்டறிந்தனர். முதலில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற இவர், பின்னர் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். நேற்று அதிகாலையில் நாகேந்திரனுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. டாக்டர்கள் அவரை தீவிர சிகிச்சைப்பிரிவில் வைத்து சிகிச்சை அளித்தனர்.
சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலை நாகேந்திரன் உயிரிழந்தார். அவரது உடலின் இறுதி சடங்குகள் அவர் முதலில் வசித்த வியாசர்பாடி பகுதியில் நடக்கும் என்று குடும்பத்தினர் அறிவித்திருந்தனர். நாகேந்திரனின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள அவரது மூத்த மகன் அஸ்வத்தாமனும் கோர்ட்டு அனுமதியுடன் பரோலில் சிறையில் இருந்து வெளியில் வந்துள்ளார். நாகேந்திரன் மறைவால் வியாசர்பாடி பகுதி பெரும் பதற்றமாக உள்ளது. அங்கு போலீஸ் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே நாகேந்திரன் மரணம் தொடர்பாக புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சூழலில் நாகேந்திரன் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாக அவரது மனைவி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் ஆயுள் தண்டனைக் கைதி நாகேந்திரனின் உடலை தங்கள் தரப்பு டாக்டர் கொண்டு பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என்ற அவரது மனைவியின் அவசர முறையீட்டை ஐகோர்ட்டு ஏற்க மறுத்துள்ளது.
பிரேதப் பரிசோதனைக்கென நிபுணத்துவம் வாய்ந்த டாக்டர்கள் இருக்கிறார்கள்; அவர்கள் மேற்கொள்வார்கள் என நீதிபதி சதீஷ் குமார் தெரிவித்தார். எனினும், நாகேந்திரன் மனைவியின் மனு பிற்பகல் 1 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, பிற்பகல் 1 மணிக்கு மனு மீதான விசாரணை நடைபெற்றது. நீதிபதி சதீஷ்குமார், "நாகேந்திரனின் உடல் பிரேத பரிசோதனை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பணியாற்றி ஓய்வுபெற்ற டாக்டர் செல்வகுமார் முன்னிலையில் நடைபெற வேண்டும். பிரேத பரிசோதனை நிகழ்வுகள் வீடியோவாகவும் பதிவு செய்ய வேண்டும். மேலும், முக்கிய உடல் உறுப்புகளை கெடாமல் வைத்து பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும்" என்று உத்தரவிட்டார்.






