மக்கள் மனுக்களை ஆற்றில் மிதக்கவிடும் அலட்சிய மாடல் அரசு: நயினார் நாகேந்திரன் கண்டனம்

மனுக்கள் நதியில் கொட்டப்பட்டுள்ள சம்பவம் திராவிட மாடல் ஆட்சியின் அவல நிலைக்கான சாட்சி என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
மக்கள் மனுக்களை ஆற்றில் மிதக்கவிடும் அலட்சிய மாடல் அரசு: நயினார் நாகேந்திரன் கண்டனம்
Published on

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

"உங்களுடன் ஸ்டாலின்" குறைதீர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் சிவகங்கை மாவட்டத்தில் வைகை நதியில் கொட்டப்பட்டுள்ள சம்பவம் திராவிட மாடல் ஆட்சியின் அவல நிலைக்கான சாட்சி.

ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து நான்காண்டுகளாய் மக்கள் குறைகளைக் கண்டுகொள்ளாது இருந்துவிட்டு தேர்தல் பருவம் ஆரம்பமாகியதும், பெரும் ஆரவாரத்துடன் குறைதீர்ப்பு முகாம்களைத் துவக்கிய அறிவாலய அரசு, தற்போது, மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை ஆற்றில் மிதக்கவிட்டு மக்கள் நலனில் தான் காட்டும் அக்கறையைத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.

குறைகளைக் கேட்டறிய தலைவர்கள் வரும் போது திரை கட்டி கழிவு நீர் ஓடைகளை மறைப்பதும், குறைகளைச் சுட்டிக்காட்டி அளிக்கப்படும் மனுக்களை ஆற்றில் வீசியெறிவதும் தான் திராவிட மாடலின் குறைதீர்ப்பு லட்சணமா? தனது பணிகளை விட்டு வந்து, கூட்டத்தில் கால்கடுக்க, வியர்வை சிந்தி நின்று மனு அளித்தால், அதனை நீரில் மிதக்கவிடுவது தான் நாடு போற்றும் நல்லாட்சியா?

மக்கள் வரிப் பணத்தை வாரி இறைத்து செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு தனது பெயரை சூட்டி அழகு பார்க்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் மனுக்கள் ஆற்றில் மிதக்கவிடப்படுவதைப் பார்த்து நடவடிக்கை எடுப்பாரா? அல்லது வழக்கம் போல விளம்பரங்களில் மூழ்கி அலட்சியம் காட்டப் போகிறாரா?

மக்களை அலைக்கழித்து அவமதிக்கும் திமுக அரசின் அலட்சியப் போக்கே அதன் அழிவுக்கு அடித்தளமிடும்!இது உறுதி! என தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com