

சென்னை,
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. நாளை மறுநாள் விஜய் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் முதல் தேர்தலிலேயே சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய தவெகவுக்கு பாராட்டுகள் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
2026-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் NDA கூட்டணிக்கு உறுதுணையாக இருந்து ஆதரவு வழங்கிய தமிழக மக்களுக்கும், கூட்டணியின் வெற்றிக்காக அயராது பாடுபட்ட அனைத்து தோழமைக் கட்சி தொண்டர்களுக்கும், மேலும் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட நம் தமிழக பாஜகவின் அனைத்து காரியக்கர்த்தாக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த தேர்தலில், வரலாறு காணாத அளவில் இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் உற்சாகத்துடன் தன்னார்வமாக வந்து வாக்களித்து, ஜனநாயகத்தின் மீதான தங்கள் உறுதியான நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர். இதற்காக அவர்களுக்கு என் இதயம் கனிந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், தாங்கள் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியதற்கு தமிழக வெற்றிக் கழகத்திற்கு என் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.