

சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
விவசாயிகளுக்கு கொடுத்த வாக்கைக் காற்றில் பறக்கவிட்ட முதல்வர் விஜய் அவர்களே...!
கூட்டுறவு வங்கிகளில் ரூ. 75,000 வரை பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு மொத்த கடனும் தள்ளுபடி செய்யப்படுவதாக நீங்கள் வெளியிட்டுள்ள அறிக்கை, உங்கள் முதிர்ச்சியற்ற நிர்வாகத்திற்கான மற்றொரு சான்று.
தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியின்படி 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்துள்ளவர்களின் பயிர்க்கடனை எப்போது முழுமையாக ரத்து செய்வீர்கள் என்று கேட்டால், ரூ. 50,000, ரூ. 75,000 என கந்து வட்டிக்காரன் போல கடன் வரம்பை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தி கொண்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
அதிலும் ரூ. 75,000 வரை வைத்துள்ளவர்களுக்கு மட்டும் தான் 100% தள்ளுபடி எனவும், அதற்கு மேல் கடன் இருந்தால் வெறும் ரூ. 35,000 வரை மட்டுமே தள்ளுபடி எனவும் கூறுவது, சமூக சமநிலைக்கு எதிரானது.
எனவே, 55.72 லட்சம் விவசாயப் பெருமக்கள் பயன்பெறும் வகையில் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்த பாஜக ஆளும் மராட்டிய மாநிலத்தைப் பார்த்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள்! கொடுத்த வாக்கை காப்பாற்றுவது எப்படி என்பது குறித்தும், மக்களுக்கு பலனளிக்கும் நேர்மையான நிர்வாகம் நடத்துவது எப்படி குறித்தும் நாங்கள் உங்களுக்கு சொல்லித் தருகிறோம்! அதை விட்டுவிட்டு உங்களை நம்பிய விவசாயப் பெருமக்களின் வயிற்றில் அடிக்காதீர்கள்!
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.