நக்கீரன் கோபால், சபரீசன் மீதான வழக்குகளை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற முடிவு - ஐகோர்ட்டில், தமிழக அரசு தகவல்

நக்கீரன் கோபால், சபரீசன் மீதான 5 வழக்குகளை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற முடிவு செய்துள்ளதாக ஐகோர்ட்டில் தமிழக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
நக்கீரன் கோபால், சபரீசன் மீதான வழக்குகளை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற முடிவு - ஐகோர்ட்டில், தமிழக அரசு தகவல்
Published on

சென்னை,

பொள்ளாச்சியில் பெண்களை ஒரு கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பான வீடியோவை நக்கீரன் பத்திரிகை வெளியிட்டது. இதுகுறித்து கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், அந்த பத்திரிகையின் ஆசிரியர் நக்கீரன் கோபால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் நக்கீரன் கோபால் மனு தாக்கல் செய்தார். அதேபோல, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன், பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக தன் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக அவதூறு செய்தி பரப்புவதாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கொடுத்த புகாரின் அடிப்படையில், சபரீசன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதவிர மேலும் 3 வழக்குகளை சிலர் மீது பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், நக்கீரன் கோபால் முன்ஜாமீன் மனு ஐகோர்ட்டு நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் பி.டி.பெருமாள் ஆஜராகி வாதிட்டார்.

தமிழக அரசு தரப்பில் மாநில தலைமை அரசு குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன் ஆஜரானார். அவரிடம் நீதிபதி, பொள்ளாச்சி பாலியல் தொடர்பான 2 வழக்குகளை தமிழக அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றியுள்ளது. மற்ற வழக்குகளை தமிழக போலீசார் விசாரிக்கின்றனர். ஒரு சம்பவத்தின் தொடர்ச்சியான வழக்குகளை வெவ்வேறு அமைப்புகள் விசாரித்தால் சரியாகுமா? என்று கேள்வி எழுப்பினார். இதுகுறித்து அரசின் கருத்தை கேட்டு தெரிவிப்பதாக தலைமை குற்றவியல் வக்கீல் கூறினார்.

பின்னர், இந்த வழக்கு பிற்பகலில் மீண்டும் விசாரணைக்கு எடுத்தபோது, தலைமை குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன் ஆஜராகி, பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக நக்கீரன் கோபால், சபரீசன் உள்பட பலர் மீது பதிவு செய்யப்பட்ட 5 வழக்குகளை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்றார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே, இந்த சூழ்நிலையில் மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்கத் தேவையில்லை. ஒருவேளை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றியபின்னரும், தன்னை அவர்கள் கைது செய்யக்கூடும் என்று நக்கீரன் கோபால் நினைத்தால், அவர் மீண்டும் முன்ஜாமீன் கேட்டு, இந்த ஐகோர்ட்டை நாடலாம். மனுவை முடித்து வைக்கிறேன் என்று உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com