

சென்னை,
முதுபெரும் கம்யூனிச தலைவர் நல்லகண்ணு காலமானார். அவருக்கு வயது 101. வயது முதிர்வின் காரணமாக கடந்த பல நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மதியம் அவர் காலமானார்.
இது தொடர்பாக மருத்துவமனை தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘‘நல்லக்கண்ணு அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 01.02.2026 அன்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 24 தினங்களாக சிகிச்சையின் போது அவரது உடல் நிலையில் ஏற்றதாழ்வுகள் இருந்து வந்தது. பல்துறை மருத்துவக்குழு தீவிர சிகிச்சையும், அதிதீவிர கண்காணிப்பையும் தொடந்து வந்தனர். இன்று அதிகாலை முதல் மருத்துகளை ஏற்கும் தன்மை படிப்படியாக குறைந்து, அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்தது.
அதிதீவிர சிகிச்சையில் இருந்தபோதும் முக்கிய உடலுறுப்புகள் அனைத்தும் செயல் இழந்ததால் நல்லக்கண்ணு இன்று பிற்பகல் 1 55 மணியளவில் நம்மை விட்டு பிரிந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளது. நல்லகண்ணுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நல்லகண்ணுவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று மாலை 5 மணி முதல் நாளை பிற்பகல் 3 மணி வரை தி.நகரில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வைக்கப்படுகிறது. இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: -
மருத்துவமனையில் இருந்து நல்லகண்ணு நல்லுடல் இன்று (25.02.2026) மாலை 5 மணி முதல், நாளை பிற்பகல் 3 மணி வரை 43 செவாலியே சிவாஜி கணேசன் சாலை, தி. நகர், சென்னை 600 017 என்ற முகவரியில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைமை அலுவலகத்தில் (பாலன் இல்லம்) பொதுமக்கள் பார்வைக்கும், மரியாதைக்கும் வைக்கப்பட்டிருக்கும். நாளை மாலை 5 மணிக்கு அன்னாரது நல்லுடல் பொதுமக்கள் அணி வகுப்புடன் சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, மருத்துவ ஆய்வுக்காக கொடையளிப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறது.நல்லகண்ணு மறைவுக்கு எழு நாட்கள் துக்கம் கடைபிடிக்கும் வகையில் செங்கொடிகள் அரைக் கம்பத்தில் தாழ்த்தி பறக்கவிடப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.