நல்லகண்ணு உடல்நிலையில் முன்னேற்றம்; டாக்டர்கள் தகவல்

ஆஸ்பத்திரியில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் டாக்டர்கள் குழு அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறது.
சென்னை,
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான நல்லகண்ணு உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 24-ந் தேதி முதல் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆஸ்பத்திரியில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் டாக்டர்கள் குழு அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறது. தற்போது அவர் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக, அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் கூறும்போது, "நல்லகண்ணு உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது அவருக்கு செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை அளித்து வருகிறோம்.
ஓரிரு நாளில் செயற்கை சுவாசம் நிறுத்தப்பட்டு, இயற்கையாக அவர் சுவாசிக்கும் வகையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தேவைப்படும் நேரத்தில் மட்டும் அவருக்கு அவ்வபோது செயற்கை சுவாசம் வழங்கப்படுகிறது. மேலும், சுவாச பிரச்சினையை சரி செய்ய நல்லகண்ணுவுக்கு சுவாச பிசியோதெரபி சிகிச்சை அளித்து வருகிறோம். இந்த சிகிச்சையின் மூலம், சுவாச பாதையில் உள்ள சளி உள்ளிட்ட அடைப்புகள் நீக்கப்படும். மேலும், மூச்சு திணறல் போன்ற இடையூறுகள் தவிர்க்கப்பட்டு எளிதான சுவாசத்திற்கு வழி வகுக்கும்" என்றார்கள்.






