வளர்ச்சித்திட்ட பணிகளை கால தாமதமின்றி முடிக்க வேண்டும் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி அறிவுறுத்தல்

நாமக்கல் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை குறித்த காலத்திற்குள் கால தாமதம் இன்றி முடிக்க வேண்டும் என அரசு அலுவலர்களுக்கு மாவட்ட கண்காணிப்பு அதிகாரி மகேஸ்வரன் அறிவுறுத்தினார்.
வளர்ச்சித்திட்ட பணிகளை கால தாமதமின்றி முடிக்க வேண்டும் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி அறிவுறுத்தல்
Published on

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை குறித்த காலத்திற்குள் கால தாமதம் இன்றி முடிக்க வேண்டும் என அரசு அலுவலர்களுக்கு மாவட்ட கண்காணிப்பு அதிகாரி மகேஸ்வரன் அறிவுறுத்தினார்.

ஆய்வுக்கூட்டம்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குனருமான மகேஸ்வரன் தலைமை தாங்கினார். கலெக்டர் ஸ்ரேயாசிங் முன்னிலை வகித்தார்.

இந்த ஆய்வு கூட்டத்தில் மக்களைத்தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்திட்டம், கலைஞரின் நகர்புற மேம்பாட்டு திட்டம், இல்லம் தேடி கல்வித்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்னர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மகேஸ்வரன் பேசும்போது கூறியதாவது :-

தமிழக முதல்-அமைச்சர் அறிவித்த திட்டங்கள் மற்றும் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தபோது வெளியிடப்பட்ட மானிய கோரிக்கை அறிவிப்புகளை செயல்படுத்த விரைந்து பணியாற்ற வேண்டும். வேளாண்மை துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து மாதிரி செயல் விளக்க திடல்கள் தயார் செய்து, அதனால் அடையும் பயன்கள் குறித்து விவசாயிகளை நேரடியாக அழைத்து சென்று செயல்விளக்கங்கள் செய்து காண்பிக்க வேண்டும்.

அர்ப்பணிப்பு உணர்வு

வருவாய்த்துறை அலுவலர்கள் பொதுமக்களின் மனுக்கள் மீது உடனடியாக பரிசீலனை செய்து கால தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊரக வளர்ச்சித் துறையினர் தாங்கள் மேற்கொள்ளும் வளர்ச்சித்திட்ட பணிகளை குறித்த காலத்திற்குள் கால தாமதமின்றி முடித்திட வேண்டும். அனைத்து துறை அலுவலர்களும் தங்கள் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் பொதுமக்களை விரைந்து சென்றடையும் வகையில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக நாமக்கல் தாசில்தார் அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மகேஸ்வரன், வருவாய்துறை அலுவலர்களின் பணிகள் குறித்து நேரடி ஆய்வு மேற்கொண்டார்.

இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, உதவி கலெக்டர்கள் மஞ்சுளா, இளவரசி, கூட்டுறவு துறை இணைப்பதிவாளர் செல்வகுமரன், முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவசுப்பிரமணியன், இணை இயக்குனர் (மருத்துவப்பணிகள்) ராஜ்மோகன் உள்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com