நாமக்கல்: அரசுப் பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட 14 மாணவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு - மருத்துவமனையில் அனுமதி

உணவைச் சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே, அடுத்தடுத்து 14 மாணவர்களுக்குத் திடீரென கடுமையான வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.
அரசுப் பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட 14 மாணவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு.
மாணவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் காட்சி
Published on: 

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே அரசுப் பள்ளி ஒன்றில் காலை உணவு சாப்பிட்ட 14 மாணவர்களுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாந்தி- வயிற்றுப்போக்கு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த மல்லசமுத்திரம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வழக்கம்போல் இன்று (வெள்ளிக்கிழமை) காலை இயங்கியது. இப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு, தமிழக அரசின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் இன்று காலை 'சேமியா கிச்சடி' வழங்கப்பட்டது. வழங்கப்பட்ட உணவைச் சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே, அடுத்தடுத்து 14 மாணவர்களுக்கு திடீரென கடுமையான வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதனால் வகுப்பறையில் பெரும் பதற்றமான சூழல் உருவானது.

அவசர சிகிச்சை

மாணவர்களின் நிலையைக் கண்டு அதிர்ச்சியடைந்த பள்ளி ஆசிரியர்கள், உடனடியாக பாதிக்கப்பட்ட 14 மாணவர்களையும் மீட்டு மல்லசமுத்திரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து, தொடர் கண்காணிப்பில் வைத்துள்ளனர். மாணவர்களின் நிலைமை சீராக உள்ளதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விசாரணை தீவிரம்

பள்ளியில் வழங்கப்பட்ட காலை உணவின் தரம் குறித்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் உள்ளூர் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். உணவு நச்சுத்தன்மை அடைந்ததற்கான காரணம் குறித்து அறிய, சமையல் கூடத்தில் இருந்து சேமியா கிச்சடியின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அரசுப் பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்ட இச்சம்பவம், பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com