

நாமக்கல்,
அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்ப போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
நாமக்கலை சேர்ந்தவர் காண்டிராக்டர் சுப்பிரமணியன் (வயது 58). சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய போது அவருடைய நண்பர் என்ற முறையில் நாமக்கலில் உள்ள சுப்பிரமணியன் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனை தொடர்பாக மே 9-ந் தேதி விசாரணைக்கு சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராக இருந்த நிலையில், 8-ந் தேதியே சுப்பிரமணியன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து சென்னை சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதற்கிடையே தற்கொலைக்கு முன்பு சுப்பிரமணியன் எழுதிய 4 பக்கங்கள் கொண்ட கடிதத்தில் சக காண்டிராக்டர், முன்னாள் அமைச்சர் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரின் ஆதரவால் டெண்டர் எடுக்க முடியாதபடி தொல்லைகளை கொடுத்து வந்தார் என குறிப்பிட்டு இருந்தார்.
அதன் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் எம்.எல்.ஏ.விடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த மாதம் விசாரணை நடத்தினர். 2-ம் கட்டமாக நேற்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராக பழனியப்பனுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர்.
இதற்கிடையே துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியமூர்த்தியை செல்போனில் தொடர்பு கொண்ட பழனியப்பன் சென்னையில் தனக்கு பணிகள் இருப்பதால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை என்று தெரிவித்தார். இதையடுத்து அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்பி விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்து உள்ளனர்.