

நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் பிலிக்கல்பாளையம் அருகே வீடு புகுந்து கணவன், மனைவியை கட்டிப் போட்டு 40 பவுன் நகை, 40 லட்சம் பணத்தை முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல்பாளையம் அருகே சினிமா கொட்டகை மேடு பகுதியில் இருந்து சின்னமருதூர் செல்லும் சாலையின் அருகே குடியிருந்து வருபவர் வைரவன் (60). இவர் கடந்த 20 வருடங்களாக வெல்லம் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி சுமதி(55). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. வீட்டில் கணவன்-மனைவி மட்டும் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் முகமூடி அணிந்து வந்த 4 பேர் கொண்ட கும்பல், வைரவனின் வீட்டு காம்பவுண்ட் சுவரின் மீது ஏறி குதித்து உள்ளே சென்றுள்ளனர். முதலில் மேல் மாடியில் உள்ள அறைகளை பார்த்து விட்டு மேலே ஒன்றும் இல்லாததால் கீழ்பகுதியில் உள்ள வீட்டின் கதவை உடைத்து உள்ளனர்.
அப்போது வைரவன் மனைவி சுமதி எழுந்து வந்தபோது கதவை உடைத்து உள்ளே புகுந்த முகமூடி கொள்ளையர்கள், கணவன், மனைவி இருவரையும் கட்டிப் போட்டனர். பின்னர் பணம், நகை எங்கே உள்ளது? என்று கேட்டு மிரட்டி உள்ளனர். அதற்கு பதில் கூறாதால் வைரவனை கத்தியால் கிழித்துள்ளனர். அதன்பின் இருவரையும் நன்றாக கட்டி வைத்துவிட்டு வீட்டில் உள்ள பீரோவை உடைத்து பீரோவுக்குள் இருந்த 40 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.40 லட்சம் பணம் ஆகியவற்றை திருடிக் கொண்டு மர்ம நம்பர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இது குறித்து உடனடியாக வைரவன் ஜேடர்பாளையம் போலீசருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் அடிப்படையில் பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர பாண்டியன், பரமத்தி வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உமா சங்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
பின்னர் இது குறித்து நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு யாதவ் கிரீஸ் அசோக் மற்றும் பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு துணைப் போலீஸ் சூப்பிரண்டு வெண்ணிலா ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து இரு அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.
அதனை தொடர்ந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். மோப்பநாய் வீட்டில் இருந்து புறப்பட்டு சின்ன மருதூர் செல்லும் சாலைக்கு ஓடிச் சென்று, அந்த வழியில் சிறிது தூரம் ஓடிச் சென்றது. கைரேகை நிபுணர்கள், வீட்டின் பல்வேறு இடங்களில் பதிவான ரேகைகளை பதிவு செய்தனர்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் நள்ளிரவில் பதிவான பதிவுகளை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார். இந்த கொள்ளைச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.