வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தங்களுக்காக தமிழகம் முழுவதும் 30.68 லட்சம் பேர் விண்ணப்பம் - தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் போன்றவற்றுக்காக 30 லட்சத்து 68 ஆயிரத்து 713 விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தங்களுக்காக தமிழகம் முழுவதும் 30.68 லட்சம் பேர் விண்ணப்பம் - தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
Published on

சென்னை,

2021-ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலை தயாரிப்பதற்காக சுருக்கமுறை திருத்தப்பணிகள் கடந்த நவம்பர் 16-ந் தேதி தொடங்கின. அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதை பார்வையிட்ட வாக்காளர்கள் பலர், அதில் மேற்கொள்ளவேண்டிய திருத்தம், முகவரி மாற்றம் போன்றவற்றுக்காக விண்ணப்பித்தனர்.

ஆன்லைன் மூலமாகவும், சம்பந்தப்பட்ட அலுவலகங்களிலும், சிறப்பு முகாம்களிலும் இதற்காக விண்ணப்பங்களை அளித்தனர். வரும் ஜனவரி 1-ந் தேதியில் 18 வயதை நிறைவு செய்வோர் பலரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்புக்காக விண்ணப்பித்தனர்.

இந்த விண்ணப்பங்களை வாங்கும் சுருக்கமுறை திருத்தப்பணி 15-ந் தேதி முடிவடைந்தது. இந்த காலகட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் போன்றவற்றுக்காக 30 லட்சத்து 68 ஆயிரத்து 713 விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இவற்றில் அதிகபட்சமாக சென்னையில் 2 லட்சத்து 21 ஆயிரத்து 642 விண்ணப்பங்கள் தாக்கல் ஆகியுள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 62 ஆயிரத்து 785 விண்ணப்பங்களும், காஞ்சீபுரம் மாவட்டத்தில் 57 ஆயிரத்து 230 விண்ணப்பங்களும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 1 லட்சத்து 27 ஆயிரத்து 70 விண்ணப்பங்களும் அளிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெயர் சேர்ப்புக்காக 20 லட்சத்து 99 ஆயிரத்து 915 விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்த தகவலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com