அரசு பஸ்சில் சீன மொழியில் பெயர் பலகை- பயணிகள் அதிர்ச்சி

திண்டுக்கல்லில், அரசு பஸ்சில் சீன மொழியில் டிஜிட்டல் பெயர் பலகை இருந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
அரசு பஸ்சில் சீன மொழியில் பெயர் பலகை- பயணிகள் அதிர்ச்சி
Published on

திண்டுக்கல்,

தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படுகிற சில பஸ்களில், தற்போது டிஜிட்டல் பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பெயர் பலகைகள் அதிக வெளிச்சத்துடன் ஒளிரும் தன்மை கொண்டது. குறிப்பாக பகலை காட்டிலும், இரவில் அதிக பிரகாசமாக காட்சி அளிக்கும். டிஜிட்டல் பெயர் பலகை பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  டிஜிட்டல் பெயர் பலகையை பார்த்து, தாங்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்கு போகும் பஸ்களை அடையாளம் கண்டு பொதுமக்கள் சென்று வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பழனியில் இருந்து திண்டுக்கல் பஸ் நிலையத்துக்கு அரசு பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ் பழனி, பொள்ளாச்சிக்கு செல்லும் வழித்தடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.இதையடுத்து அங்கு காத்திருந்த பயணிகள் ஆர்வமுடன் பஸ்சில் ஏறுவதற்கு முயன்றனர். ஆனால் பஸ்சில் ஒளிர்ந்து கொண்டிருந்த டிஜிட்டல் பெயர் பலகையை பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதில் புரியாத மொழியில் வாசகம் இடம்பெற்று இருந்தது. இதனால் குழப்பத்தின் உச்சத்துக்கு சென்ற பயணிகள், அந்த பஸ்சில் ஏற தயக்கம் காட்டினர்.

பின்னர் பஸ்சில் இருந்து இறங்கிய கண்டக்டரிடம் அந்த பஸ் பொள்ளாச்சி செல்கிறதா? என்று கேட்டனர். அவரும் பஸ் பொள்ளாச்சிக்கு செல்கிறது என்று கூறியதையடுத்து அந்த பஸ்சில் ஏறிச்சென்றனர். ஒருசிலர் மொழி புரியாததால் அந்த பஸ்சில் ஏறவில்லை.

காரணம் என்ன?

டிஜிட்டல் பலகை செயல்படுவதற்கான மென்பொருள் சீனாவில் தயாரிக்கப்பட்டது. எனவே அதனை இயக்கும்போது முதலில் சீனமொழியே வரும். அதன்பிறகு டிரைவர் அல்லது கண்டக்டர்கள் தமிழ் மொழியில் மாற்றம் செய்ய வேண்டும். ஆனால் அந்த பஸ்சை இயக்கிய டிரைவரும், கண்டக்டரும் டிஜிட்டல் பலகையை 'ஆன்' செய்து விட்டு அப்படியே விட்டு விட்டனர். தமிழ்மொழியை பெயர் பலகையில் மாற்றவில்லை. இது தான், குழப்பத்துக்கு காரணம் என்று அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com