பெயர்களை அழிக்கலாம்! ஆனால் வரலாற்றை தொடக்கூட முடியாது! - அன்பில் மகேஷ்

மாணவர்களுக்கான திட்டங்களை தொட நினைத்தால் ஜனநாயக முறையில் எதிர்ப்பதற்கு தயார் ஆவோம் என அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
முன்னாள் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்
Published on

சென்னை,

முன்னாள் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

பெயர்களை அழிக்கலாம்! ஆனால் வரலாற்றை தொடக்கூட முடியாது! போலியான மாற்றத்தால் வரலாற்றை துளிக்கூட மாற்ற முடியாது! திரவிட மாடல் அரசின் முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களின் பெயர்கள் மாணவர்களால் மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்டது.

தலைநிமிர வைத்தது

“நான் முதல்வன்” திட்டத்திற்கான பெயராக சுமார் ஐந்து விருப்பங்கள் முன்னாள் முதல்-அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டன. அவற்றில் “நான் முதல்வன்” என்ற பெயர் இடம்பெறவில்லை. முழுத் திட்ட வடிவமைப்பையும் பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த முன்னாள் முதல்-அமைச்சர், “ஒவ்வொரு மாணவரும், இளைஞரும் தாங்கள் தேர்ந்தெடுக்கும் துறையில் முதலிடத்தை அடைய வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கம். அதனால், ‘முதல்வன்’ என்ற சொல் இடம்பெறும் வகையில் ‘நான் முதல்வன்’ என்று பெயரிட்டால் என்ன?” என்று பரிந்துரைத்தார். அப்பெயர் தமிழ்நாட்டு இளைஞர்களையும், மாணவர்களையும் தலைநிமிர வைத்தது.

புதுமைப்பெண் திட்டம்

இந்த உணர்வுகள் எல்லாம் “முதல்-அமைச்சர்தான் ஆக வேண்டும்” எனும் அஜெண்டாவோடு மட்டுமே வந்தவர்களுக்கு தெரிய போவதில்லை. தெரிந்தாலும் அவர்கள் உணர போவதில்லை! அதேபோல், “புதுமைப்பெண் திட்டம்” என்ற பெயரை ஒரு கல்லூரி நிகழ்வில் முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வாக்களித்து சூட்டியவர்கள் மாணவிகள்!

மக்களுக்கு புரியவில்லை

வரலாறாக நிலைத்து நிற்கப்போகும் திரவிட மாடல் அரசின் சாதனைத் திட்டங்களின் பெயர்களை பற்றி இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இன்றைய ஆட்சியாளர்கள் “நான் முதல்வன்” திட்டத்தைப்போல இன்னும் பல திட்டங்களுக்கு பெயர்களை நிச்சயம் மாற்றுவார்கள். அதற்கு காரணமாக “மக்களுக்கு புரியவில்லை“ என்கிற ரீதியில் மட்டம் தட்டிப்பேசும் கதைகளையும் கூட அருமையாக அவிழ்த்துவிடுவார்கள். நாமும் நம்புவதற்கு தயாராக இருப்போம்

ஆனால், மாணவர்களுக்கான திட்டங்களை தொட நினைத்தால் ஜனநாயக முறையில் எதிர்ப்பதற்கு தயார் ஆவோம்!

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com