சென்னை மாநகராட்சி சார்பில் ‘நம்ம லிட்டில் ஹீரோஸ்’ விழா: தூய்மைப் பணியாளர் குழந்தைகள் உற்சாகம்

போட்டிகளில் வெற்ற குழந்தைகளுக்கு வெற்றி கோப்பைகளும், பங்கேற்கும் அனைத்து குழந்தைகளுக்கும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
சென்னை மாநகராட்சி சார்பில் ‘நம்ம லிட்டில் ஹீரோஸ்’ விழா: தூய்மைப் பணியாளர் குழந்தைகள் உற்சாகம்
மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன்
Published on: 

சென்னை,

சென்னை மாநகராட்சி சார்பில் தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கான 'நம்ம லிட்டில் ஹீரோஸ் - 2026' நடைபெற்றது. இது தொடர்பாக, வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

நம்ம லிட்டில் ஹீரோஸ் - 2026

சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளின் திறமைகளையும், கனவுகளையும் கொண்டாடும் விதமாகவும் 'நம்ம லிட்டில் ஹீரோஸ் - 2026' விழா மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன், தலைமையில், இன்று மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

மாநகராட்சி ஆணையாளர்

சென்னை மாநகராட்சியை தூய்மையாகவும் அழகாகவும் வைத்திருக்க இரவு பகல் பாராமல் உழைக்கும் தூய்மைப் பணியாளர்களின் உழைப்பை போற்றும் விதமாகவும், அவர்களின் குழந்தைகளின் திறமைகளையும், கனவுகளையும் கொண்டாடும் விதமாகவும் 'நம்ம லிட்டில் ஹீரோஸ் - 2026' (Namma Little Heroes - 2026) விழா சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில், இன்று (21.11.2026) தேனாம்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

மடிக்கணினிகள்

இவ்விழாவில், மாநகராட்சி ஆணையாளர், அதிக மதிப்பெண்கள் பெற்ற தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு தலா ரூ.35,000/- மதிப்புள்ள மடிக்கணினிகள் மற்றும் ரூ.16,000/- மதிப்புள்ள டேப்லெட்டுகளை வழங்கினார்.

வெற்றி கோப்பைகள்

தொடர்ந்து, நடனம், பாட்டு, ஓவியம், சிலம்பம், கராத்தே, பேச்சு போட்டி மற்றும் புகைப்பட கலை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளில் குழந்தைகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகளில் வெற்ற குழந்தைகளுக்கு வெற்றி கோப்பைகளும், பங்கேற்கும் அனைத்து குழந்தைகளுக்கும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

4-ம் ஆண்டு

இந்த விழா 4ஆவது ஆண்டாக இன்று நடைபெற்றது. தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு மற்றும் பெருங்குடி ஆகிய மண்டலங்களை சார்ந்த தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் இவ்விழாவில் பங்கேற்றனர். அவர்களின் குழந்தைகளின் தன்னம்பிக்கையையும், படைப்பாற்றலையும் வெளிக்கொணரும் ஒரு சிறந்த மேடையாக இது அமைந்துள்ளது.

இவ்விழாவில் இணை ஆணையாளர் (பணிகள்) சரவணன், மண்டல அலுவலர் செந்தில்குமரன், சுமீத் எல்கோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் மஹ்மூத் சேட், தலைமை நிதி அலுவலர் மகேந்திர சப்னானி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X