மோகினி அலங்காரத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்

மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருளினார்.
மோகினி அலங்காரத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்
Published on

ஸ்ரீரங்கம்:

மோகினி அலங்காரம்

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் விழாக்களில் எல்லாம் முதன்மையானது வைகுண்ட ஏகாதசி விழாவாகும். பகல் பத்து, ராப்பத்து, இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும். இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா கடந்த மாதம் 22-ந் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது.

கடந்த மாதம் 23-ந் தேதியில் இருந்து நம்பெருமாள் தினமும் காலை மூலஸ்தானத்தில் இருந்து வெவ்வேறு அலங்காரங்களில் புறப்பாடாகி அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து வந்தார். பகல் பத்து உற்சவத்தின் நிறைவு நாளான நேற்று நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் காலை 6 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டார்.

நீண்ட வரிசையில் நின்று தரிசனம்

ஆழ்வார்கள், பக்தர்கள் புடைசூழ அர்ஜுன மண்டபத்தில் காலை 7 மணிக்கு எழுந்தருளிய நம்பெருமாள், அங்கு மாலை 5 மணி வரை பக்தர்களுக்கு சேவை சாதித்தார். பின்னர் கருடமண்டபத்தில் எழுந்தருளிய நம்பெருமாள் இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

இந்த உலக வாழ்க்கை ஒரு மாயை. மோகினி அலங்காரத்தில் நம்பெருமாளை வழிபட்டால் இந்த மாயையில் இருந்து விடுபட்டதற்கான பலன் கிடைக்கும் என ஐதீகமாக நம்பப்படுவதால் நேற்று இரவு வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று மோகினி அலங்காரத்தில் இருந்த நம்பெருமாளை தரிசித்தனர்.

இரவு முழுவதும் கண் விழித்த பக்தர்கள்

வைகுண்ட ஏகாதசியான இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 3.30 மணியளவில் மூலஸ்தானத்தில் இருந்து சிம்மகதியில் புறப்பட்டு, அதிகாலை 4.45 மணிக்கு நம்பெருமாள் சொர்க்கவாசலில் எழுந்தருளினார். இதையொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். சொர்க்கவாசல் திறப்பையொட்டி தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாது நேற்று இரவே கோவில் வளாகத்தில் குவிந்து இருந்தனர்.

முக்கிய பிரமுகர்கள் மற்றும் சிறப்பு அனுமதி அட்டை பெற்று இருந்தவர்கள் கோவிலுக்குள் அதற்காக அமைக்கப்பட்டிருந்த தனி பாதைகள் வழியாக செல்வதற்கு அனுமதிக்கப்பட்டார்கள். இலவச தரிசனம் மற்றும் கட்டண தரிசனத்திற்காக வந்த பக்தர்கள் இரவில் இருந்தே நீண்ட வரிசையில் காத்து நின்றனர். நம்பெருமாள் சொர்க்கவாசலில் எழுந்தருளிய பின்னர் அந்த வழியாக சென்று அவரை தரிசிப்பதற்காகவும், மூலவரை முத்தங்கி சேவையில் தரிசனம் செய்வதற்காகவும் கோவில் பிரகாரங்களில் ஏராளமான பக்தர்கள் இரவு முழுவதும் கண் விழித்து காத்து இருந்தனர்.

விழாக்கோலம்

வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி நேற்று மாலை 236 அடி உயரம் கொண்ட ராஜகோபுரத்தின் உச்சியில் இருந்து அடிப்பாகம் வரை மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து கோபுரங்கள் மற்றும் மதில்சுவர்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளன.

மொத்தத்தில் புண்ணிய பூமியாம் ஸ்ரீரங்கம் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. மேலும் பக்தர்களை ஒழுங்குபடுத்தி, நெரிசல் இன்றி அவர்கள் தரிசனம் செய்வதற்கு வசதியாக 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

திருக்கைத்தல சேவை

ராப்பத்து உற்சவத்தின் இரண்டாம் நாளான நாளை (செவ்வாய்க்கிழமை) பகல் 12 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாவார். பகல் 1 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்படும். பிற்பகல் 3 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளுகிறார். இதேபோல் ராப்பத்து உற்சவம் முடியும் வரை நம்பெருமாள் எழுந்தருளுவார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com