மேட்டூர் அணை நீர்த்தேக்க பகுதியில் முழுமையாக காட்சி தரும் ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி சிலை

கடந்த 1-ந் தேதி சேத்துக்குழி பகுதியில் அமைந்துள்ள கிறிஸ்தவ ஆலயத்தின் ஒற்றை கோபுரம் தண்ணீர் மட்டத்துக்கு மேலே காட்சியளிக்க தொடங்கியது.
 ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி சிலை
Published on: 

சேலம்,

மேட்டூர் அணை கட்டியபோது நீர்த்தேக்க பகுதிகளில் இருந்த கிராம மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து அவர்கள் வழிபட்டு வந்த சாமி சிலைகளை அங்கிருந்து கொண்டு சென்று விட்டனர். குறிப்பாக பண்ணவாடி பரிசல் துறை பகுதியில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில், சேத்துக்குழி பகுதியில் உள்ள இரட்டை கோபுரங்களுடன் கூடிய கிறிஸ்தவ தேவாலயம், கீரைக்காரனூரில் உள்ள சோளப்பாடி வீரபத்திரன் கோவில், தேங்கல்வரை அருகே உள்ள மீனாட்சி அம்மன் கோவில் ஆகிய புராதன சின்னங்களை அப்படியே விட்டு சென்றனர்.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 79 அடிக்கு கீழே சரிந்ததால் சேத்துக்குழி பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தின் இரட்டை கோபுரம் தண்ணீருக்கு வெளியே தெரிந்து வந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதில் ஒரு கோபுரம் சாய்ந்தது. இதன்பிறகு அணை நீர்மட்டம் 77 அடிக்கு கீழ் சரியும் போது. ஒற்றை கோபுரம் தண்ணீர் மட்டத்திற்கு மேல் காட்சி அளிக்கும்.

அந்த வகையில் கடந்த 1-ந் தேதி சேத்துக்குழி பகுதியில் அமைந்துள்ள கிறிஸ்தவ ஆலயத்தின் ஒற்றை கோபுரம் தண்ணீர் மட்டத்துக்கு மேலே காட்சியளிக்க தொடங்கியது. அதன்பிறகு கடந்த 7-ந் தேதி அணையின் நீர்மட்டம் 68 அடிக்கு கீழ் சரிந்ததால் ஜலகண்டேஸ்வரர் கோவிலின் நந்தி சிலை தண்ணீர் மட்டத்திற்கு மேலே தலை காட்ட தொடங்கியது.நேற்று அணையின் நீர்மட்டம் 60 அடிக்கு கீழ் சரிந்ததால் ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி சிலை அமைந்துள்ள பீடம் வரை முழுமையாக காட்சியளிக்கிறது. அதேபோன்று ஜலகண்டேஸ்வரர் கோவில் கோபுரமும் தண்ணீர் மட்டத்திற்கு மேல் காட்சியளிக்க தொடங்கி உள்ளது.

சுற்றுலா பயணிகள் வருகை

அணை நீர்மட்டம் மேலும் குறையும் நேரங்களில் ஜலகண்டேஸ்வரர் கோவில் கோபுரம், நந்தி சிலை அமைந்துள்ள பீடம் மற்றும் கிறிஸ்தவ ஆலயத்தின் ஒற்றை கோபுரம் ஆகியவை தண்ணீர் மட்டத்துக்கு மேல் சற்று உயரமாக ஒரளவு முழுமையாக தெரியும்.

இந்த காலக்கட்டங்களில் பண்ணவாடி பகுதிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் கோவில் கோபுரம், கிறிஸ்தவ ஆலய கோபுரம், நந்தி சிலை ஆகிய புராதன சின்னங்களை பரிசல் களில் சென்று பார்வையிட்டு வழிபடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது இந்த புராதன சின்னங்கள் ஓரளவு வெளியே தெரிய தொடங்கி உள்ளதால் பண்ணவாடி பரிசல் துறைக்கு வரும் நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com