நாங்குநேரி இரட்டைக்கொலை வழக்கு; சமூக வலைதளங்களில் வன்முறையை தூண்டினால் கடும் நடவடிக்கை - போலீசார் எச்சரிக்கை

பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற கருத்துக்களை விஷமத்தனத்துடன் பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாங்குநேரி இரட்டைக்கொலை வழக்கு; சமூக வலைதளங்களில் வன்முறையை தூண்டினால் கடும் நடவடிக்கை - போலீசார் எச்சரிக்கை
Published on

நெல்லை,

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் உள்ள ஒரு டீக்கடை முன்பு கடந்த 2-ந்தேதி இரவு சிலர் பேசிக்கொண்டு இருந்தனர்.

அப்போது அங்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்மகும்பல் சிலர் போதையில் அங்கிருந்த பலரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் பெரும்பத்து இந்திராகாலனியை சேர்ந்த ஜான் (வயது 42), செங்கசூளையில் பணியாற்றி வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த திரினாத் கட்டா (50) ஆகியோர் உயிரிழந்தனர்.

மேலும் நெல்சன் (60), கணேசன் (52), பிரபாகரன் (50), ராமசாமி (70), புளியங்குளத்தை சேர்ந்த சசிகுமார் (26) ஆகியோர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொலைவெறி தாக்குதலை கண்டித்து அந்த பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. குற்றவாளிகளை பிடிக்க போலீசார் வலை வீசி தேடுதல் வேட்டை நடத்தினர்.

இரட்டைக்கொலை தொடர்பாக நேற்று மாலை தென்னிமலையை சேர்ந்த கண்ணன் (20), அந்தோணிமைக்கேல் ராஜ் (19), உச்சிமகாளி என்ற மண்டை (23), வசந்தகுமார் (19), சுப்பையா என்ற சுபாஷ் (19), கல்யாணி (20), இசக்கிராஜா (19) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் நாங்குநேரி இரட்டைக்கொலை தொடர்பாக சமூக வலைதளங்களில் வன்முறையை தூண்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருநெல்வேலி மாவட்ட போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக வெளியிடப்படுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

நாங்குநேரி போலீஸ் நிலைய சரகம், பெரும்பத்து கிராமத்தில் கடந்த 02.03. 2026 அன்று இரவு நடைபெற்ற கொலை சம்பவம் தொடர்பாக, நாங்குநேரி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, புலன் விசாரணையில், மேற்படி கொலை சம்பவத்தில் தொடர்புடைய எதிரிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த குற்ற சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பிரிவினையை தூண்டும் விதமாக, வன்முறையான வார்த்தைகளை பயன்படுத்தி, சட்டம் ஒழுங்கு பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவுகள் செய்யும் நபர்கள் மீது தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது.

விஜயநாராயணம் மற்றும் நாங்குநேரி போலீஸ் நிலையங்களில் மேற்படி குற்ற சம்பவம் சம்பந்தமாக, வன்முறையை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவு செய்த நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு , சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மாவட்டத்தில் வன்முறை மற்றும் பிரச்சினையை தூண்டும் வகையில் இதுபோல பிரச்சனைக்குரிய பதிவுகளை சமூக வலைதளங்களில் பரப்பும் மற்றும் பதிவு செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி. வி.பிரசண்ண குமார், IPS., அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற இது போன்ற கருத்துக்களை விஷமத்தனத்துடன் பதிவு செய்வதை தவிர்த்து, சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com