நாங்குநேரி சம்பவம்: திரைப்படங்களே வன்செயல்களுக்கு தூண்டுகோலாக அமைகின்றன - சசிகலா குற்றச்சாட்டு

நாங்குநேரி சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சசிகலா வலியுறுத்தி உள்ளார்.
நாங்குநேரி சம்பவம்: திரைப்படங்களே வன்செயல்களுக்கு தூண்டுகோலாக அமைகின்றன - சசிகலா குற்றச்சாட்டு
Published on

சென்னை,

நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவர் சின்னத்துரை, தங்கை சந்திரா செல்வி ஆகியோரை மாணவர்கள் உள்ளிட்ட கும்பல் அரிவாளால் வெட்டியது. இதில் படுகாயமடைந்த அவர்கள் 2 பேரும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து வி.கே.சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

"சாதிகள் இல்லையடி பாப்பா' என்று பாரதியார் பாடலை இளம் வயது முதல் கற்றுக்கொடுத்து வந்தபோதிலும் மாணவர்களின் மனதில் சாதி நஞ்சை விதைப்பவர்கள் இருப்பதை யாராலும் தடுக்க முடியவில்லை என்பது மிகவும் கவலை அளிக்கிறது. மேலும், சமீபத்தில் வெளிவந்த ஒரு சில தமிழ் திரைப்படங்களும் இது போன்ற வன்செயல்களுக்கு தூண்டுகோலாக அமைந்துவிட்டதோ என்ற ஐயமும் எழுகிறது.

தமிழகத்தில் உள்ள பள்ளிக்கூடங்களில் கல்வி பயிலும் மாணவ செல்வங்கள் மத்தியில் எந்தவித ஏற்ற தாழ்வுகள், சாதிய பிரிவினைகள் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பும் கடமையும் ஆசிரியர்களுக்கும் உள்ளது. அதை உறுதி செய்கின்ற பணியினை ஆட்சியாளர்கள் மேற்கொள்ள வேண்டும்.

திமுக தலைமையிலான அரசு தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இது போன்ற சாதிய மோதல்களை ஒடுக்க வேண்டிய நிரந்தர தீர்வை எடுக்க வேண்டும். நாங்குநேரியில் நடைபெற்ற இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைமையிலான அரசைக் கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com