தேசிய கீதம் சர்ச்சை: முதல்-அமைச்சருக்கு புரோட்டோகால் கூட தெரியாதது வருத்தம் அளிக்கிறது: உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

முதல்-அமைச்சர் விஜய்யின் பேச்சில் ஒரு 10 ரீல்ஸ் தேறும் என்று உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் விமர்சனம், vijay
Published on

சென்னை,

தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசின் முதல் சட்டசபை கூட்டம் கடந்த 18-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து, 19 மற்றும் 22-ந் தேதிகளில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது.

இந்த விவாதத்தில் பங்கேற்று பேசிய ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தார்கள். நிறைவு நாளான இன்று, முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பதிலுரை வழங்கி பேசினார். அப்போது முதல்-அமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து பல விமர்சனங்களை வைத்தார்.

டாஸ்மாக்கில் கட்சி நிதி என்று அடித்த கொள்ளை ஒவ்வொன்றாக கஜானாவிற்குள் சேர்த்துக் கொண்டிருக்கிறோம் என்றார். இந்நிலையில், முதல்-அமைச்சர் விஜய் பேச்சுக்கு தி.மு.க உறுப்பினர் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். விஜய் பேசி முடித்ததும் உங்களுக்கு பேச வாய்ப்பு வழங்கப்படும் என்று சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் அறிவித்தார்.

இதனைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் விஜயின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

சட்டமன்றத்தை ஷூட்டிங் ஸ்பாட்டாக மாற்றியுள்ளார் முதல்-அமைச்சர் விஜய். சட்டமன்றத்தை சினிமா தியேட்டர் போல ஆக்கிட்டாங்க.. இதெல்லாம் சட்டசபை பாக்காதது.

முழுக்க முழுக்க ரீல்ஸ்க்காகவும், டிரெண்டுக்காகவுமே முதல்-அமைச்சர் பேசுகிறார் இன்று விசில் அடிக்கிறார்கள், விரைவில் அமைச்சர்கள் பாடல் போட்டு நடனமாடுவார்கள்.

10 ரீல்ஸ்

பேரவையில் இன்றைக்கு முதல்-அமைச்சர் விஜய் 30 நிமிடம் பேசி இருக்கிறார். அதில் ஒரு 10 ரீல்ஸ் தேறும். ஸ்கிரிப்ட்டை அவர் பேசி முடிக்கும்வரை யாரும் கட் சொல்ல கூடாது, சட்டமன்றத்தை ஷூட்டிங் ஸ்பாட்டாக மாற்றி இருக்கிறார்கள். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தவர் எப்படி இருப்பாரோ... அது போல் முதல்-அமைச்சரின் உரை அமைந்துள்ளது.

தொடர்ந்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்விகளை கேட்க வேண்டும் என்று முயற்சி எடுத்து வருகிறீர்கள்.. முதல்-அமைச்சர் உங்களுக்கும் பதில் சொல்ல மாட்டாங்கிறார் - அவையில் எங்களுக்கும் பதில் சொல்ல மாட்டேங்கிறார்.

என்று அவர் கூறினார்.

இருமுறை தேசிய கீதம்

2021ல் கலைஞர் நூற்றாண்டு படத்திறப்பின்போது சட்டமன்றத்தில் இருமுறை தேசிய கீதம் பாடப்பட்டதாக முதல்-அமைச்சர் விஜய் குறிப்பிட்டதற்கு பதில் அளித்த உதயநிதி, “தமிழ்த்தாய் வாழ்த்து ஒரு முறையும், தேசிய கீதம் 2 முறையும் பாடப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலில்லை. குடியரசுத் தலைவர் பேரவைக்கு வந்தால் அங்கு தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்பது புரோட்டோகால்.

ஒரு புரோட்டோகால் கூட முதல்-அமைச்சருக்கு தெரியாதது வருத்தமளிக்கிறது. குடியரசுத் தலைவருக்கு தனி புரோட்டோகால் உள்ளது. அது கவர்னருக்கு கிடையாது” என்று கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com