தமிழகம் முழுவதிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் - வானதி சீனிவாசன்

திமுகவின் தவறான கொள்கைகள் மற்றும் நிர்வாக தோல்விகள் காரணமாக தமிழகம் பின்னோக்கி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் - வானதி சீனிவாசன்
Published on

கோவை,

தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், என்னையும், கொங்கு மண்டலத்தில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களையும் ஆதரித்து உரையாற்றிய பாரதப் பிரதமர் நரேந்திரமோடி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, தொண்டாமுத்தூர் தொகுதி வெற்றி வேட்பாளரும் அதிமுக கொங்கு மண்டலத் தேர்தல் பொறுப்பாளருமான எஸ்.பி.வேலுமணி ஆகியோருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, வளர்ச்சி மற்றும் நல்லாட்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய உரை மிகவும் ஊக்கமளிப்பதாக இருந்தது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதியான நிலைப்பாடும், அண்ணாமலையின் தீவிரமான பரப்புரையும், வேலுமணியின் கொங்கு மண்டலத்தில் வலுவான அடித்தளமும் இணைந்து, தமிழகத்தில் என்.டி.ஏ கூட்டணியின் வெற்றியை உறுதி செய்யும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை, திமுக ஆட்சியின் கீழ் ஊழல், குடும்ப ஆட்சி, இளைஞர்கள் வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு போன்ற பல்வேறு தீய சக்திகள் நிலவுகின்றன. திமுகவின் தவறான கொள்கைகள் மற்றும் நிர்வாகத் தோல்விகள் காரணமாக தமிழகம் பின்னோக்கி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மக்களின் வரிப்பணம் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் செலவழிக்கப்படும் இந்த ஊழல் ஆட்சியை மக்கள் இனியும் தாங்க மாட்டார்கள். வலிமை வாய்ந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் நிச்சயம் வெற்றி பெறும். தீய சக்தியான திமுகவின் ஆட்சி வீழ்ந்து, தமிழகம் மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்லும். கொங்கு மண்டலத்திலும், தமிழகம் முழுவதிலும் என்.டி.ஏ வேட்பாளர்களுக்கு அமோக வெற்றி கிடைக்கும் என உறுதியுடன் நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com