‘நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க 15-ந்தேதி வரை அவகாசம் தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

‘நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 15-ந்தேதி வரை அவகாசம் வழங்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
‘நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க 15-ந்தேதி வரை அவகாசம் தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
Published on

நீட் தேர்வு

நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் இளநிலை மருத்துவ படிப்பில் சேர 2016-ம் ஆண்டு முதல் நீட்' தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஓராண்டு தாமதமாக 2017-ம் ஆண்டு முதல் இத்தேர்வு நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ளதால், பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை மறுநாள் (5-ந்தேதி) தொடங்க இருக்கிறது. அதனால் நீட்' தேர்வையும் குறித்த காலத்துக்குள் நடத்தி முடித்துவிட என்.டி.ஏ. என்று அழைக்கப்படும் தேசிய தேர்வு முகமை திட்டமிட்டுள்ளது.

11 லட்சம் பேர் விண்ணப்பம்

அதன்படி வரும் ஜூலை மாதம் 17-ந்தேதி நீட்' தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியான நிலையில், நாடு முழுவதும் டாக்டர் கனவோடு இருக்கும் பிளஸ்-2 மாணவர்கள் நீட்' தேர்வுக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.

தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் கடந்த மாதம் 28-ந்தேதி வரை சுமார் 11 லட்சம் பேர் நீட்' தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். இந்த எண்ணிக்கை 17 லட்சம்வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலம் வருகிற 6-ந்தேதி இரவுடன் முடிவடைகிறது.

15-ந்தேதி வரை அவகாசம்

இந்த நிலையில் நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க மேலும் 9 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, வரும் 15-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அன்றைய தினம் இரவு 9 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், இரவு 11.50 மணி வரை விண்ணப்ப கட்டணம் செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப விவரங்கள், தேர்வுமுறை, நுழைவுச்சீட்டு பதிவிறக்கம், தேர்வு முடிவுகள் உள்ளிட்ட விவரங்களை என்.டி.ஏ. வலைதளத்தில் அறிந்துகொள்ளலாம்.

இதற்கிடையே, வரும் 21-ந்தேதி நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கான நீட்' தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று 85 சதவீத மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அகில இந்திய மருத்துவசங்கம் சார்பில் ஆன்லைன்' வழியாக நடத்தப்பட்ட ஓட்டெடுப்பில் இது தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com