கடையநல்லூரில் என்ஜினீயர் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை

கடையநல்லூரில் என்ஜினீயர் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த லேப்டாப், செல்போனை கைப்பற்றினர்.
கடையநல்லூரில் என்ஜினீயர் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை
Published on

என்.ஐ.ஏ. சோதனை

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் (என்.ஐ.ஏ.) சோதனை நடத்தினர். அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் கடையநல்லூரிலும் சோதனை மேற்காண்டனர். அதாவது, அதிகாலை 5 மணி அளவில் சென்னையில் இருந்து 2 கார்களில் 5 பேர் கொண்ட தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் குழுவினர் வந்தனர்.

செல்போனில் குறுந்தகவல்

அவர்கள், கடையநல்லூர் ரசாலிபுரம் தெருவில் உள்ள முகம்மது இத்ரீஸ் என்பவரின் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து தீவிர சோதனை மேற்கொண்டனர். முகம்மது இத்ரீஸ் செல்போன் எண்ணுக்கு தடை செய்யப்பட்ட இயக்கங்களில் இருந்து தகவல் வந்ததாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையிலும், மேலும் அவர் ஆன்லைன் மூலம் அரபி மொழியில் இருந்து தமிழாக்கம் செய்வதையும் கற்று வந்துள்ளார். இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஐ.எஸ்.எஸ். அமைப்புடன் தொடர்பில் இருக்கிறாரா? என பல்வேறு கோணத்திலும் முகம்மது இத்ரீசிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

லேப்டாப்-பென் டிரைவ்

தொடர்ந்து முகம்மது இத்ரீஸ் வீட்டில் இருந்து லேப்டாப், செல்போன், சி.டி., பென் டிரைவ், இஸ்லாமிய கொள்கை விளக்க புத்தகங்கள், துண்டு பிரசுரங்கள் ஆகியவற்றையும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைப்பற்றி காரில் எடுத்துச் சென்றனர். அதிகாலை 5 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை காலை 10 மணி அளவில் நிறைவு பெற்றது.

என்ஜினீயர்

முகம்மது இத்ரீஸ் என்ஜினீயரிங் படித்து முடித்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தற்போது இவர் வீட்டில் இருந்தவாறு பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையால் கடையநல்லூர் பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com