தேசிய லோக் அதாலத்: தமிழகத்தில் 58 ஆயிரம் வழக்குகள் முடிவுக்கு வந்தன

நாடு முழுவதும் நடந்த தேசிய லோக் அதாலத்தில் தமிழகத்தில் 58 ஆயிரம் வழக்குகள் இரு தரப்பினரின் சம்மதத்துடன் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்று சட்டப்பணி ஆணைக்குழு நீதிபதி தெரிவித்துள்ளார்.
தேசிய லோக் அதாலத்: தமிழகத்தில் 58 ஆயிரம் வழக்குகள் முடிவுக்கு வந்தன
Published on

மக்கள் நீதிமன்றம்

நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகளை விரைவாக முடிவுக்கு கொண்டுவர ஆண்டுக்கு 4 முறை தேசிய அளவில் லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்றத்தை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தேசிய சட்டப்பணி ஆணைக்குழு நடத்தி வருகிறது. இதன்படி நாடு முழுவதும் இந்த ஆண்டுக்கான 4-வது தேசிய லோக் அதாலத் நேற்று நடத்தப்பட்டது.

தமிழகத்தில், மாநில சட்டப்பணிகள் குழு சார்பில் லோக் அதாலத் நேற்று நடத்தப்பட்டது. ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி அறிவுறுத்தலின்படி, ஐகோர்ட்டு மூத்த நீதிபதிகள் பரேஷ் உபாத்தியாய், எம்.துரைசாமி ஆகியோர் மேற்பார்வையில் இந்த லோக் அதாலத் நடந்தது.

நீதிபதிகள் தலைமையில் அமர்வு

சென்னை ஐகோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு மதுரை கிளையில், ஐகோர்ட்டு நீதிபதிகள் மற்றும் ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதிகள் 8 பேர் தலைமையில் 8 அமர்வுகள் அமைக்கப்பட்டது.

இதுபோல மாவட்ட அளவிலும் நீதிபதிகள் தலைமையில் அமர்வுகள் அமைக்கப்பட்டன. மொத்தத்தில் மாநிலம் முழுவதும் பணியில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் 417 அமர்வுகள் அமைக்கப்பட்டது. இந்த நீதிபதிகள் வழக்கில் தொடர்புடைய இரு தரப்பினரையும் அழைத்து சமரசம் பேச்சுவார்த்தை நடத்தி வழக்குகளை விசாரித்தனர்.

சமரச பேச்சு

காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த விசாரணை மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. இதில் முடிவுக்கு வந்த வழக்குகளின் விவரங்கள் குறித்து தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலர் நீதிபதி ராஜசேகர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

தேசிய லோக் அதாலத்தில், காசோலை மோசடி வழக்கு, சிவில் வழக்கு, ஜீவனாம்சம் தொடர்பான குடும்ப நல வழக்கு, தொழிலாளர் வழக்கு என்று பல வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

வழக்கில் தொடர்புடைய இரு தரப்பினரையும் அமரவைத்து, நீதிபதிகள் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, இருதரப்பு சம்மதத்துடன் ஏராளமான வழக்குகளை முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர்.

388 கோடி ரூபாய்

மொத்தம் 57 ஆயிரத்து 773 வழக்குகள் இரு தரப்பினரின் சம்மதத்துடன் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதன் மூலம் வழக்கு தொடர்ந்தவர்களுக்கு 388 கோடியே 30 லட்சத்து 56 ஆயிரத்து 722 ரூபாய் கிடைத்துள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com