மெட்ரோ ரெயிலில் பயணிக்க 1-ந்தேதி முதல் தேசிய பொது போக்குவரத்து அட்டை

மெட்ரோ ரெயில் நிறுவனம் தேசிய பொது போக்குவரத்து அட்டைக்கு முழுமையாக மாற திட்டமிட்டுள்ளது.
மெட்ரோ ரெயிலில் பயணிக்க 1-ந்தேதி முதல் தேசிய பொது போக்குவரத்து அட்டை
Published on

சென்னை,

சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் பயணிகள் ரெயிலில் எளிமையாக பயணிக்கும் வகையில் சி.எம்.ஆர்.எல். எனப்படும் பயண அட்டையை முதலில் அறிமுகப்படுத்தியது. அதன்பின், கடந்த 2023-ம் ஆண்டு கூடுதலாக தேசிய பொது போக்குவரத்து அட்டை (சிங்கார சென்னை அட்டை) அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தநிலையில், வரும் ஆகஸ்டு 1-ந்தேதி முதல் மெட்ரோ ரெயில் நிறுவனம் தேசிய பொது போக்குவரத்து அட்டைக்கு முழுமையாக மாற திட்டமிட்டுள்ளது. எனவே, 41 மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் சி.எம்.ஆர்.எல். பயண அட்டைகளை ரீசார்ஜ் செய்யும் வசதி நிறுத்தப்படுகிறது. கியூ ஆர் பயணச்சீட்டுகள் மற்றும் பிற பயணச்சீட்டு பெறும் முறைகள் வழக்கம்போல் தொடரும்.

பயணிகள் தங்களது பயண அட்டைகளில் உள்ள மீதித் தொகையை மெட்ரோ ரெயில்களில் பயணிப்பதற்கு பயன்படுத்திக் கொள்ளவும். மேலும், பயண அட்டையின் இருப்புத் தொகை குறைந்தபட்சமாக ரூ.50 இருக்கும்போது, பயண அட்டையை மெட்ரோ ரெயில் டிக்கெட் கவுண்ட்டர்களில் ஒப்படைத்துவிட்டு, பயணிகள் தேசிய பொது போக்குவரத்து அட்டையை எவ்வித கட்டணமும் இல்லாமல் பெற்றுக்கொள்ளலாம். மேலும், பழைய பயண அட்டையின் வைப்புத்தொகை மற்றும் மீதமுள்ள தொகை புதிய தேசிய பொது போக்குவரத்து அட்டைக்கு மாற்றி கொண்டு பயணிகள் தொடர்ந்து பயன்படுத்தி கொள்ளலாம் என மெட்ரோ ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com