திருச்செந்தூரில் கடல் அரிப்பு ஏற்பட்ட பகுதியில் தேசிய ஆராய்ச்சி மைய குழுவினர் 2-வது நாளாக ஆய்வு

திருச்செந்தூரில் கடல் அரிப்பு ஏற்பட்ட பகுதியில் தேசிய ஆராய்ச்சி மைய குழுவினர் 2-வது நாளாக ஆய்வு செய்து வருகின்றனர்.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள், கடலில் புனித நீராடிய பின்னர் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்வார்கள். இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக கடல் சீற்றத்தின் காரணமாக கோவில் முன் அமைந்துள்ள கடற்கரையில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. வழக்கத்தை விட கடல் நீரும் சுமார் 50 அடி தூரத்திற்கு வெளியே வந்துள்ளது. அதேபோல் அப்பகுதியில் பாறைகளும் வெளியே தெரிகின்றன.
இதனால் கோவில் முன்புள்ள கடற்கரை படிக்கட்டு பகுதியில் இருந்து கடலுக்குள் பக்தர்கள் இறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடல் அரிப்பு ஏற்பட்டுள்ள பகுதியில் பாதுகாப்பு கருதி பக்தர்கள் இறங்காதவாறு தடுப்பு வேலிகள் கொண்டு பாதை அடைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் கடற்கரையில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த நிலையில் நேற்று இந்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் தேசிய கடலோர ஆராய்ச்சி மைய தலைமை விஞ்ஞானி ராமநாதன் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவினர் கடல் அரிப்பு ஏற்பட்ட பகுதியில் ஆய்வு செய்தனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் முன் உள்ள கடற்கரையில் இருந்து அமலிநகர் கடற்கரை வரை கடற்கரையோரம் நடந்து சென்று அரிப்பு ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர். மேலும், கோவில் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்களிடம் இதுவரையில் இந்த பகுதியில் நடந்த கடல் அரிப்பு சம்பவங்கள் குறித்து கேட்டறிந்தனர்.
இந்நிலையில், திருச்செந்தூரில் கடல் அரிப்பு ஏற்பட்ட பகுதியில் தேசிய ஆராய்ச்சி மைய குழுவினர் 2-வது நாளாக இன்றும் ஆய்வு செய்து வருகின்றனர். அப்போது தலைமை விஞ்ஞானி ராமநாதன் கடல் அரிப்பு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து பதிவு செய்து கொண்டார். டிரோன் மூலம் கடற்கரையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆய்வுகள் அனைத்தும் அறிவியல் முறைப்படி செய்யப்படுகின்றன. ஆய்வு செய்யப்படும் அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளன.






