

சென்னை,
வெளிநாட்டு பணப்பரிமாற்றங்கள் குறித்து வருமான வரித்துறை நாடு தழுவிய அளவில் சரிபார்ப்பு நடவடிக்கையை தொடங்கி உள்ளது.
சந்தேகத்திற்குரிய வெளிநாட்டு பணப் பரிமாற்றங்கள் குறித்து வருமான வரித்துறை நாடு தழுவிய விரிவான சரிபார்ப்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நாடு முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் அதிகப்படியான அந்நிய செலாவணியை வெளிநாடுகளுக்கு அனுப்பிய சந்தேகத்திற்குரிய நிறுவனங்களை உளவுத்துறை மற்றும் தரவு பகுப்பாய்வு மூலம் வருமான வரித்துறை கண்டறிந்துள்ளது.
போலி அறக்கட்டளைகள் மூலம் நிதி பரிமாற்றம் செய்த நிறுவனங்கள், வருமான வரி தாக்கல் செய்யாதவை அல்லது மிகக்குறைந்த வருவாயைக் காட்டி வருமான வரி தாக்கல் செய்பவை என்பது களஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த நிறுவனங்கள் அறிவிக்கப்பட்ட முகவரிகளில் செயல்படவில்லை என்பதும், சரக்கு போக்குவரத்து. மென்பொருள் இறக்குமதி போன்ற பரிமாற்ற காரணங்கள் உண்மையானவை அல்ல என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட தொழில் வல்லுநர்களால் அதிக எண்ணிக்கையி லான படிவம் 15 சிபி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதை வருமான வரித்துறை கவனித்துள்ளது. இந்த சான்றிதழ்களை வழங்கும் கணக்காளர்கள் போதிய விடாமுயற்சி மேற்கொள்ள வில்லை. தற்போது சுமார் 394 நிறுவனங்கள் மற்றும் 36 தொழில் வல்லுநர்கள் மீது இந்த சரிபார்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
நில எல்லை மாவட்டங்களில் உள்ள நிறுவனங்களும் இதில் அடங்கும். சான்றிதழ்களை வழங்கும் கணக்காளர்கள், பணப் பரிமாற்றங்களைச் சான்றளிக்கும் முன் உண்மைகளை முறையாக ஆய்வு செய்ய வேண்டும் என்று வருமான வரி கமிஷனர் வி.ரஜிதா வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பான விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.