கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா 23-ந் தேதி தொடங்குகிறது

வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா 23-ந் தேதி தொடங்குகிறது
Published on

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் 10 நாட்கள் நவராத்திரி விழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா வருகிற 23-ந்தேதி தொடங்குகிறது. அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந் தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. இதையொட்டி 23-ந் தேதி காலை 7.45 மணிக்கு மேல் 8.45 மணிக்குள் அம்மன் கொலு மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.

தொடர்ந்து திருவிழா நாட்களில் தினமும் அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், 11 மணிக்கு அம்மனுக்கு வைரக் கிரீடம், வைரக்கல் மூக்குத்தி, தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலிக்கும் நிகழ்ச்சி, 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, பகல் 12 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு ஆன்மிக நிகழ்ச்சி, இரவு 9 மணிக்கு அம்மன் வாகனத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றி 3 முறை பவனி வருதல் நடைபெறுகிறது.

விழாவில் 10-ம் திருவிழாவான அடுத்த மாதம் 2-ந் தேதி காலை 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் அலங்கார மண்டபத்தில் அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி, பகல் 12 மணிக்கு அம்மன் அலங்கார மண்டபத்தில் இருந்து வெள்ளிக்குதிரை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்துடன் மகாதானபுரம் நோக்கி பரிவேட்டைக்கு ஊர்வலமாக புறப்பட்டு செல்லுதல் நடக்கிறது. இதில் யானை ஊர்வலம், குதிரை ஊர்வலம், முத்துக்குடை ஊர்வலம், கோலாட்டம் மற்றும் கேரள புகழ் தெய்யம் ஆட்டம் ஆகியன நடைபெறும்.

மகாதானபுரத்தில் பரிவேட்டை நடக்கிறது. பின்னர் அம்மன் வீதி உலா வருதல், தொடர்ந்து அம்மன் வெள்ளி பல்லக்கில் கன்னியாகுமரிக்கு புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. அங்கு நள்ளிரவு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு, பின்னர் வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்கள் நிர்வாகம் செய்து வருகிறது. மேலும் பரிவேட்டை நிகழ்ச்சிகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கன்னியாகுமரி பகவதி அம்மன் பக்தர்கள் சங்கம் இணைந்து செய்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com