சென்னையில் நவராத்திரி கொலு பொம்மைகள் கண்காட்சி தொடக்கம்

இக்கண்காட்சியில் மரப்பாச்சி பொம்மைகள் முக்கிய இடம் வகிக்கிறது.
கண்காட்சி
Published on: 

சென்னை,

சென்னையில் நவராத்திரி கொலு பொம்மைகள் கண்காட்சி தொடங்கியுள்ளது.

இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

“கொலு” என்பது “நவராத்திரியை” முன்னிட்டு பொம்மைகளை வைத்து செய்யப்படும் ஒரு வழிப்பாட்டு முறையாகும். இது இந்துக்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இப்பண்டிகை அனைவராலும், மிகவும் பக்தியுடனும், மகிழ்வுடனும் கொண்டாடப்படுவதாகும். தமிழ்நாட்டில் இவ்விழா “நவராத்திரி” என்ற பெயரிலும், கர்நாடகத்தில் “தசரா” என்ற பெயரிலும், மேற்குவங்கத்திலும், வட இந்தியாவின் பிறப்பகுதிகளிலும் “துர்காபூஜை” என்ற பெயரிலும் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்பண்டிகை பொதுவாக தமிழ் மாதமான புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசையை அடுத்து வரும் பிரதமை திதியில் இருந்து பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இது இந்து சமயம் சக்தியின் வழிபாடாக கருதப்படுகிறது.

கொலு பொம்மைகள் கண்காட்சி

“பூம்புகார்” என்று புகழ் பெற்று விளங்கும் தமிழ்நாடு அரசு நிறுவனமான, தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம், கைவினைஞர்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்தும் நோக்கத்துடன் பல்வேறு கண்காட்சிகளை நடத்தி வருகிறது. இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு கொலு பொம்மைகளை வழங்குவதற்காக பூம்புகார் நிறுவனம் ஆண்டுதோறும் “கொலு பொம்மைகள் கண்காட்சி” என்ற சிறப்பானதொரு கண்காட்சியினை நடத்தி வருகிறது.

கடந்த ஆண்டைப் போன்றே இந்த ஆண்டும் சென்னை பூம்புகார் விற்பனை நிலையத்தில் “நவராத்திரி கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை” நேற்று காலை 10.30 மணியளவில் லில்லி(அரசு செயலாளர்), கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறை(அரசு செயலாளர்) மற்றும் அமிர்தஜோதி, நிர்வாக இயக்குநர், தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழக ஆகியோர் தலைமையில் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கப்பட்டது. இக்கண்காட்சி 28.09.2029 முதல் 31.10.2026 முடிய (ஞாயிறு உட்பட) தினசரி காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடைபெற உள்ளது.

மரப்பாச்சி பொம்மைகள்

இந்த நவராத்திரி கொலு கண்காட்சியில் களிமண், காகிதக்கூழ் பளிங்குத்தூள், மரம், கொல்கத்தா களிமண், சுடுகளிமண் ஆகிய பொருட்களைக் கொண்டு கடவுள் மற்றும் தெய்வ உருவங்கள், விலங்குகளின் உருவங்கள் மற்றும் திருவிழா தொகுப்பு பொம்மைகள் தயாரிக்கப்பட்ட கொலு பொம்மைகள் பார்வைக்கும் மற்றும் விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன. இக்கண்காட்சியில் மரப்பாச்சி பொம்மைகள் முக்கிய இடம் வகிக்கிறது.

இக்கண்காட்சியில் கல்யாண செட், அஷ்டலெட்சுமி செட், தசாவதாரம் செட், அறுபடைவீடு செட், வைகுண்டம் செட், யசோதா கிருஷ்ணா செட் , கிராமத்துப் பெண்கள் செட், பொங்கல் செட், சங்கீத மும்மூர்த்திகள் செட், கும்பகர்ணன் செட், விநாயகர் தர்பார் செட், கார்த்திகைப்பெண்கள் செட், கருட சேவை, திருப்பதி ஊஞ்சல் செட், பிரம்மோற்சவ செட், கரகாட்டம் செட், சேதுபந்தனம் செட், ஐயப்பன் செட், தெப்பக்குளம் செட், குபேர லட்சுமி செட், கள்ளழகர் செட், பழனி காவடி செட், நவதுர்க்கை செட், நவ நரசிம்மர் செட், மனுநீதி செட், கோலாட்டம் செட், சஞ்சீவி மலை செட், காதணி விழா செட், நால்வர் செட், சப்த ரிஷிகள் செட், சாப்பாடு பந்தி செட், பொய்க்கால் குதிரை, ராமர் செட், ராமர் பட்டாபிஷேகம் செட், மீனாட்சி கல்யாண செட், கிரிக்கெட் செட், கல்யாண ஊர்வலம் செட், பாண்டுரங்கன் செட், திருவண்ணாமலை கிரிவலம் செட், அண்ணாமலை உண்ணாமலை செட், சீனிவாசர் கல்யாண செட், திருப்பதி தேர், விவசாய செட், லஷ்மி சரஸ்வதி செட், கோவர்த்தனகிரி செட், குபேரன் செட், வாரணமாயிரம் செட், காய்கறிகள் செட், ஸ்ரீ காஞ்சி பெரியவர் போன்ற கருத்து சார்ந்த சிறப்பான கொலு பொம்மைகள் காட்சிக்கும் மற்றும் விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் பார்வை

தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் மற்றும் ஆந்திரபிரதேசத்தின் கொண்டப்பள்ளி சென்னைப்பட்டனா மற்றும் எட்டிக்குப்பாமர பொம்மைகள், கர்நாடகம், கொல்கத்தா, ராஜஸ்தான் மற்றும் புதுச்சேரி போன்ற பிற மாநிலங்களிலிருந்தும் கொலு பொம்மைகள் தருவிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இக்கண்காட்சியில் பலவித கொலு பொம்மைகளுடன் கூடுதலாக மேலும் பலவிதமான பரிசு பொருட்கள் மற்றும் புதுமையான கலைப்பொருட்களில் சந்தன மரப்பொருட்கள், வெண்மரப்பொருட்கள், நூக்கமர பொருட்கள், பித்தளை பொருட்கள் மற்றும் ஒவியங்கள், பலவகையான துணி வகைகள், பழங்குடிவினைப் பொருட்கள், கண் கவரும் விதமாக பொதுமக்கள் பார்வைக்கும் மற்றும் விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன.

சிறப்புத்தள்ளுபடி

இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ள அனைத்து கொலு பொம்மைகளுக்கும் 10 சதவிகிதம் சிறப்புத்தள்ளுபடி வழங்கப்படுகிறது. அனைத்து வங்கி அட்டைகளும் எவ்வித சேவைக்கட்டணமுமின்றி ஏற்றுக் கொள்ளப்படும். இக்கண்காட்சியில் குறைந்த பட்சம் ரூ.50 மதிப்புள்ள கொலு பொம்மைகளும், அதிகபட்சம் ரூ.1,25,000 மதிப்புள்ள கொலு பொம்மைகள் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன. இக்கண்காட்சி மூலம் ரூ.100 லட்சம் விற்பனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இக்கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள கைவினைப்பொருட்களை வாடிக்கையாளர்கள் வாங்குவதன் மூலம் அவர்களின் இல்லத்தை அழகு கூட்டுவதுடன் இக்கலைப் பொருட்களை உற்பத்தி செய்யும் அதிக அளவிலான கைவினைஞர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் இக்கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com