மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா இன்று தொடங்குகிறது

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா இன்று தொடங்குகிறது
Published on

மதுரை,

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் மீனாட்சி அம்மனுக்கு என்று தனியாக ஆடி முளைக்கொட்டு திருவிழா, நவராத்திரி விழா, ஐப்பசி கோலாட்ட உற்சவ விழா போன்ற திருவிழாக்கள் சிறப்பு வாய்ந்தவை.

இந்த ஆண்டு நவராத்திரி உற்சவ விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 24-ந் தேதி வரை நடக்கிறது. நவராத்திரி திருவிழா நாட்களில் தினசரி மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை மூலஸ்தான சன்னதியில் உள்ள மீனாட்சி அம்மனுக்கு திரை போட்டு அபிஷேகம், அலங்காரம், கல்பபூஜை மற்றும் சகஸ்ரநாம பூஜை போன்ற விஷேச பூஜைகள் நடைபெறும். அந்த நேரத்தில் பக்தர்களுக்கு அர்ச்சனை, மூலஸ்தான அம்மனுக்கு நடத்தப்படாது. கொலு மண்டபத்தில் எழுந்தருளும் அலங்கார அம்மனுக்கு தான் அர்ச்சனைகள் செய்யப்படும்.

நவராத்திரி திருவிழாவையொட்டி அம்மன் சன்னதி 2-ம் பிரகாரத்தில் உள்ள கொலு மண்டபத்தில் எழுந்தருளும் உற்சவர் மீனாட்சி அம்மன் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பர். அதன்படி இன்று ( 15-ந் தேதி) ராஜராஜேஸ்வரி அலங்காரமும்,, 16-ந் தேதி அர்ஜூனனுக்கு பாசுபதம் அருளியது. 17-ந் தேதி ஏகபாதமூர்த்தி, 18-ந் தேதி கால்மாறிஆடியபடலம், 19-ந் தேதி தபசு காட்சி, 20-ந் தேதி ஊஞ்சல், 21-ந் தேதி சண்டேசா அனுக்கிரஹமூர்த்தி, 22-ந் தேதி மகிஷாசுரமர்த்தினி அலங்காரமும், 23-ந் தேதி சிவபூஜை செய்யும் அலங்காரமும் செய்யப்பட்டு தினமும் சிறப்பு பூஜை நடக்கிறது. மேலும் 13 அரங்குகளில் அலங்கார பொம்மைகளுடன் கொலுச்சாவடிகள் அமைக்கப்படுகிறது.

திருவிழா நடைபெறும் நாட்களில் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் ஆன்மிக சொற்பொழிவு, பரதநாட்டியம், வீணை இசைக்கச்சேரி, கர்நாடக சங்கீதம், தோற்பாவை கூத்து, பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு ஆகிய கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணைகமிஷனர் கிருஷ்ணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

திருவிழாவையொட்டி பொற்றாமரை குளம், கோபுரங்கள், மற்றும் சன்னதிகள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com