கவர்னர் மாளிகையில் நவராத்திரி கொலு நிகழ்ச்சி - பொதுமக்களுக்கு அழைப்பு

கவர்னர் மாளிகையில் நடைபெறும் நவராத்திரி கொலு நிகழ்ச்சியில் பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கவர்னர் மாளிகையில் நவராத்திரி கொலு நிகழ்ச்சி - பொதுமக்களுக்கு அழைப்பு
Published on

சென்னை,

சென்னையில் உள்ள கவர்னர் மாளிகையில், வரும் அக்டோபர் 3-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை நவராத்திரி கொலு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"தமிழ்நாடு கவர்னர் மாளிகையில் 'நவராத்திரி கொலு 2024 அக்டோபர் 3-ந்தேதி (வியாழக்கிழமை) முதல் அக்டோபர் 12-ந்தேதி (சனிக்கிழமை) வரை கொண்டாடப்படுகிறது. இவ்விழாவினை தமிழ்நாடு கவர்னர் ஆர்.என் ரவி, அக்டோபர் 3-ந்தேதி அன்று சென்னை கவர்னர் மாளிகையில் தொடங்கி வைக்கவுள்ளார்.

தினமும் மாலை 4 மணி முதல் 5 மணி வரை நடைபெறும் வழிபாடு நிகழ்ச்சியிலும் மற்றும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை நடைபெறும் கலாசார நிகழ்ச்சி கொண்டாட்டங்களில் தனிநபர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்துக் கொள்ளலாம். ஆர்வமுள்ள தனிநபர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தங்கள் விண்ணப்பங்களை navaratrilest@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செப்டம்பர் 30-ந்தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பங்களில் தங்களது பெயர், வயது, பாலினம், முகவரி, கைப்பேசி எண், வருகைக்கான தேதி மற்றும் புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்று போன்ற விவரங்கள் இருக்க வேண்டும். 'முதலில் வருவோருக்கு முன்னுரிமை' என்ற அடிப்படையில் ஒவ்வொரு நாளும் அதிகபட்சமாக 150 பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்களுக்கு அவர்களுக்கான ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தினை உறுதிப்படுத்தும் மின்னஞ்சல் அனுப்பப்படும். பார்வையாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நேரத்திற்கு குறைந்தது 30 நிமிடங்களுக்கு முன்னதாக, கவர்னர் மாளிகை இரண்டாம் நுழைவாயில் வழியாக வந்தடைய வேண்டும். தங்களுக்கு அனுப்பப்பட்ட உறுதிப்படுத்திய மின்னஞ்சலின் நகல் மற்றும் அசல் புகைப்பட அடையாளச் சான்றினை உடன் கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஆர்வமுள்ள வெளிநாட்டினரும் 'நவராத்திரி கொலு 2024' கொண்டாட்டங்களில் கலந்துக்கொள்ள வரவேற்கப்படுகிறார்கள். அவர்களின் அசல் கடவுச்சீட்டு மட்டுமே அடையாளச் சான்றாக ஏற்றுக்கொள்ளப்படும். இக்கொலு கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்கான எந்தவொரு கோரிக்கையையும் நிராகரிக்கும் உரிமையை கவர்னர் மாளிகை, தமிழ்நாடு, கொண்டுள்ளது."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com