

சென்னை,
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ளன. ஆனால், இதுவரை எந்த கட்சியும் கூட்டணியை இறுதி செய்யவில்லை. இந்த முறை 4 முனைப்போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில், நாம் தமிழர் கட்சி மட்டும் தனித்து தேர்தல் களம் காண்கிறது. தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க. ஆகிய கட்சிகள் வலுவான கூட்டணி அமைத்தே தேர்தலை சந்திப்பது என்ற முடிவில் இருக்கின்றன. பேச்சுவார்த்தை நடத்தும் சில கட்சிகள் இன்னும் முடிவை அறிவிக்காததால், தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் கூட்டணியை இறுதி செய்ய முடியாத நிலையில் உள்ளன.
ஆனால், கூட்டணி கதவை திறந்து வைத்தும் த.வெ.க. கூட்டணிக்கு இன்னும் யாரும் வரவில்லை. அதனால், தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணியில் அதிருப்திக்கு உள்ளாகும் கட்சிகள் வேண்டுமானால், த.வெ.க. பக்கம் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசியலில் தற்போதைய நிலையில், தே.மு.தி.க., பா.ம.க. (டாக்டர் ராமதாஸ் அணி), டாக்டர் கிருஷ்ணசாமி போன்றோர் இன்னும் எந்த கூட்டணியில் இணைய போகிறோம் என்பதை அறிவிக்கவில்லை. இதனால், ஆளுங்கட்சியும் (தி.மு.க.), ஆண்ட கட்சியும் (அ.தி.மு.க.) கூட்டணி கதவை மூட முடியாமல் காத்திருக்கின்றன.
குறிப்பாக, தே.மு.தி.க. எந்த கூட்டணியில் இணைய போகிறது என்பதை யாராலும் யூகிக்க முடியவில்லை. தி.மு.க., அ.தி.மு.க. என இரு கூட்டணியிலும் ஒரே நேரத்தில் பேச்சுவார்த்தையை நடத்தி கொண்டு மதில் மேல் பூனையாக இருந்த தே.மு.தி.க., நிறைவாக தி.மு.க. கூட்டணியில் 6 தொகுதிகள், ஒரு ராஜ்ய சபா சீட் ஆகியவற்றுக்கு சம்மதம் தெரிவித்து விட்டதாக கூறப்பட்டது. அதேநேரத்தில், அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள, மத்தியில் ஆளும் கட்சியான பா.ஜ.க., கூட்டணியை மேலும் பலப்படுத்தும் முயற்சியாக மீண்டும் தே.மு.தி.க.வுடன் சில சலுகைகளுடன் பேச்சுவார்த்தையை மேற்கொண்டது.
இந்த நேரத்தில், தே.மு.தி.க.வுக்குள்ளும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சிலர் போட்டியிட வாய்ப்பு கேட்டு போர்க்கொடி தூக்கியதால், தி.மு.க. கூட்டணியில் உறுதியளிக்கப்பட்ட 6 தொகுதிகள் போதாது என்ற நிலை ஏற்பட்டது. இதுபோன்ற அசாதாரண சூழ்நிலையில், பேச்சுவார்த்தைக்கு வந்த பா.ஜ.க.விடம் தே.மு.தி.க.வால் மறுப்பு சொல்ல முடியவில்லை. பேச்சுவார்த்தையின்போது பா.ஜ.க, 8 தொகுதிகள், ஒரு ராஜ்ய சபா சீட், ஒரு மத்திய இணை மந்திரி பதவி ஆகியவை தருவதாக வாக்குறுதி அளித்ததாக தெரிகிறது.
இதைத்தான் ஆரம்பத்திலேயே அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. எதிர்பார்த்ததாம். எதிர்பார்ப்பு பூர்த்தியாகவே தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தும் உடனடியாக கூட்டணிக்கு சம்மதித்து விட்டதாக தெரிகிறது. இதனால், தி.மு.க. தலைமை தே.மு.தி.க. மீது அதிருப்தியில் உள்ளதாம். கூடு விட்டு கூடு பாய்வது போல், திடீரென தி.மு.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க. மாற இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.