அம்மாபேட்டை அருகேகரும்பு தோட்டத்தில் பயங்கர தீ விபத்து

அம்மாபேட்டை அருகே கரும்பு தோட்டத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
அம்மாபேட்டை அருகேகரும்பு தோட்டத்தில் பயங்கர தீ விபத்து
Published on

அம்மாபேட்டை

அம்மாபேட்டை அருகே கரும்பு தோட்டத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

கரும்பு தோட்டம்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 60). இவர் டெக்ஸ்டைல் நிறுவன உரிமையாளர். இவரது மாமனார் பழனி கவுண்டர் என்பவர் தோட்டம் ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே பெரிய குரும்பபாளையத்தில் உள்ளது. இங்கு வேலுச்சாமி கரும்பு பயிரிட்டு பராமரித்து வந்தார். இது நன்கு விளைந்து இன்னும் ஒரு வாரத்தில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது.

இந்த நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் அந்தப் பகுதியில் கரும்பு பாரம் ஏற்றிய லாரி ஒன்று சித்தாரை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது ரோட்டின் இடையில் மின்சார ஒயர் குறுக்கே சென்றதால் லாரி மீது இருந்த கரும்பு பாரத்தின் மீது உரசுவது போல் இருந்தது.

தீ விபத்து

இதனால் அந்த ஒயரை உயர்த்த லாரியில் இருந்த நபர் ஒருவர் கட்டையால் மின் ஒயரை தூக்கினார். அப்போது மற்றொரு பகுதியில் தாழ்வாக இறங்கிய மின்சார ஒயர் கரும்பு பயிர் மீது பட்டது. இதில் கரும்பு தோட்டத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இரவு நேரம் என்பதால் தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிந்தது.

உடனடியாக இதுபற்றி பவானி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். அதற்குள் தீ விபத்தில் கரும்புகள் எரிந்து நாசமானது. மொத்தம் 6 ஏக்கர் பரப்பளவிலான கரும்பு பயிர் எரிந்து சேதமானது. இதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் பக்கத்து தோட்டங்களுக்கு தீ பரவாமல் இருக்க தண்ணீரை பீய்ச்சியடித்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com