

கம்பம் பாரதியார் நகரைச் சேர்ந்தவர் முருகன் (வயது 50). இவரது உறவினரான கம்பம் மணிநகரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (40). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் முருகன், ஜெயச்சந்திரன் ஆகியோர் குடும்பத்துடன் கூடலூர் தம்மணம்பட்டி அருகே உள்ள தொட்டி பாலம் பகுதியில் குளித்து கொண்டிருந்தார். அங்கு வந்த கம்பம் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் பெண்கள் குளிக்கும் இடத்திற்கு அருகே தண்ணீரில் குதித்தார்.
அப்போது முருகன் தட்டி கேட்க சென்றபோது, அவரை ஈஸ்வரன் ஆபாசமாக பேசி கையால் முகத்தில் குத்தி கீழே தள்ளி விட்டார். பின்னர் ஈஸ்வரனின் நண்பரான அருணாசலம் என்பவர் அங்கு கிடந்த கண்ணாடி பீர்பாட்டிலை எடுத்து உடைத்து ஜெயச்சந்திரனை கழுத்தின் இடதுபக்கத்தில் குத்தினார். இதனைப் பார்த்து அலறிய பெண்கள், குழந்தைகளை பார்த்து கொலை மிரட்டல் விடுத்து இருவரும் அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதையடுத்து உறவினர்கள் படுகாயமடைந்த ஜெயச்சந்திரனை மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து முருகன் கூடலூர் தெற்கு போலீசில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டியன் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்.