

திண்டுக்கல்,
திண்டுக்கல் அருகே ஆட்டுக் கொட்டகைக்குள் புகுந்த 5 தெருநாய்கள் கடித்ததில் 17 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 5-க்கும் மேற்பட்ட ஆடுகள் காயமடைந்துள்ளன.
திண்டுக்கல்லை அடுத்த சென்னமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (47). விவசாயியான இவர், சீலப்பாடி சின்னம்மா கொட்டம் பகுதியில் கொட்டகை அமைத்து 150-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். இவரது மாமியார் முத்துலட்சுமி (65), கொட்டகையில் தங்கியிருந்து ஆடுகளை பராமரித்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று இரவு கொட்டகையின் முன்பு ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது அங்கு புகுந்த 5 தெருநாய்கள் ஆடுகளைக் கடித்துக் குதறின. இதனால் மிரண்டு போன ஆடுகள் அங்கும் இங்குமாக ஓடின.
ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு வெளியே வந்த முத்துலட்சுமி, தெருநாய்களை விரட்ட முயன்றார். இருப்பினும் நாய்களின் தாக்குதலில் 17 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. மேலும் 5-க்கும் மேற்பட்ட ஆடுகள் காயமடைந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது, உயிரிழந்த ஆடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று ரவிச்சந்திரன் கோரிக்கை விடுத்தார்.
திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, தெருநாய்களைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.