கள்ளக்குறிச்சி அருகே வரதட்சணை கேட்டு தாக்கியதால் பெண் தற்கொலை கணவர் கைது

கள்ளக்குறிச்சி அருகே வரதட்சணை கேட்டு தாக்கியதால் மனமுடைந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக அவரது கணவர் கைது செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சி அருகே வரதட்சணை கேட்டு தாக்கியதால் பெண் தற்கொலை கணவர் கைது
Published on

கள்ளக்குறிச்சி அருகே உள்ள தென் கீரனூர் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 50). இவருக்கும் செம்படாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த தாண்டவராயன் மகள் உஷா (40) என்பவருக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 1 மகளும், மகனும் உள்ளனர். திருமணமான நாள் முதல் பெரியசாமி, தனது மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் உஷாவை பெரியசாமி வீட்டை விட்டு துரத்தியதாகவும் தெரிகிறது. இதையடுத்து உறவினர்கள் சமாதானப்படுத்தி, அவர்களை சேர்த்து வைத்தனர்.

தற்கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும், பெரியசாமி தனது மனைவியிடம், பெற்றோர் வீட்டில் இருந்து பணம் வாங்கிக் கொண்டு வருமாறு கூறி, அவரை ஆபாசமாக திட்டி தாக்கியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த உஷா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உஷாவின் உடலை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து உஷாவின் அண்ணன் செந்தில்குமார் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து பெரியசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com