ஓட்டப்பிடாரம் அருகேமாட்டு வண்டி, குதிரை வண்டி பந்தயம்

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டு வண்டி, குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது.
Published on

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே கோவிந்தம்பட்டியில் கோவில் சித்திரை கொடைவிழாவ முன்னிட்டு மாட்டு வண்டி, குதிரை வண்டி பந்தயம் நடந்தது. பந்தயம் நடந்த சாலையின்இருபுறமும் ஏராளமான மக்கள் திரண்டிருந்து கண்டுகளித்தனர்.

மாட்டு வண்டி பந்தயம்

ஓட்டப்பிடாரம் அருகே கோவிந்தம்பட்டி உத்ர காளியம்மன், கருப்பசாமி கோவில் சித்திரை கொடை விழா நடந்தது. இக் கொடை விழாவை முன்னிட்டு சின்ன மாட்டு வண்டி பந்தயம் மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடந்தன.

பசுவந்தனை- கோவில்பட்டி சாலையில் நடந்த சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 8 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இந்த பந்தயத்திற்கு 6 கி.மீ. தூரம் நிர்ணயிக்கப்பட்டது.

இப்பந்தயத்தை மணியாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு லோகேஸ்வரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் வண்டிகளில் பூட்டப்பட்ட மாடுகள் சீறிப்பாய்ந்து ஓடின. அப்போது சாலையின் இருபுறமும் திரண்டிருந்த மக்கள் கரவொலி எழுப்பி உற்சாகப்படுத்தினர். இதில் தீத்தம்பட்டி மயிலேறி பெருமாள் மாட்டு வண்டி முதல் இடத்தையும், சங்கரப்பேரி கருத்தாயம்மாள் மாட்டு வண்டி 2-வது இடத்தையும், சொக்கலிங்கபுரம் காளியம்மன் மாட்டு வண்டியும் 3-வது இடத்தையும் பிடித்தன. வெற்றி பெற்ற வண்டிகளுக்கு முறையே ரூ.27ஆயிரம், ரூ.15,001, ரூ.7,001 ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. மாட்டு வண்டிகளின் சாரதிகளும் கவுரவிக்கப்பட்டனர்.

குதிரை வண்டி

இதனை தொடர்ந்து நடந்த குதிரை வண்டி பந்தயத்துக்கு 10 கி.மீ. தூரம் நிர்ணயிக்கப்பட்டது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 12 குதிரை வண்டிகள் கலந்து கொண்டன. போட்டியில் நெல்லை வண்ணாரப்பேட்டை இசக்கிஅம்மன் குதிரை வண்டி முதலிடத்தை பிடித்து ரூ.16 ஆயிரம் பரிசுத்தொகையை தட்டி சென்றது. 2-வது இடம் பிடித்த கம்மாலங்குளம் கருப்பசாமி குதிரை வண்டிக்கு ரூ.7 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது. 3-வது இடம் பிடித்த நெல்லை மகா கணபதி குதிரை வண்டிக்கு ரூ.5 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது. இந்த மாட்டு வண்டி, குதிரை வண்டி பந்தயத்தை கோவிந்தம்பட்டி சுற்றுவட்டாரத்தை சர்ந்த ஏராளமான பொதுமக்கள் சாலையின் இருபுறமும் திரண்டிருந்து கண்டு களித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com