போரூர் போலீஸ் நிலையம் அருகே துணிகரம் ஏ.டி.எம்.மில் பணம் நிரப்ப வந்த ஊழியரை வெட்டி ரூ.10 லட்சம் கொள்ளை

போரூர் போலீஸ் நிலையம் அருகே வங்கி ஏ.டி.எம். மையத்தில் பணம் நிரப்ப வந்த ஊழியரை கத்தியால் வெட்டி, ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்து சென்றவர்களை, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
போரூர் போலீஸ் நிலையம் அருகே துணிகரம் ஏ.டி.எம்.மில் பணம் நிரப்ப வந்த ஊழியரை வெட்டி ரூ.10 லட்சம் கொள்ளை
Published on

பூந்தமல்லி,

சென்னை போரூரை அடுத்த நூம்பல் மூவேந்தர் நகர் பகுதியில் கனரா வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று இரவு 8.30 மணியளவில் தனியார் ஏஜென்சி ஊழியர்களான தேவராஜ் (வயது 35), முரளி(30) ஆகியோர் இந்த ஏ.டி.எம்-மில் பணம் நிரப்ப காரில் வந்தனர்.

மொத்தம் ரூ.14 லட்சம் வைத்து இருந்தனர். அதில் ரூ.4 லட்சத்தை ஏ.டி.எம். எந்திரத்தில் வைத்து கொண்டு இருந்தனர். ஆனால் அவர்கள், ஏ.டி.எம். மையத்தின் ஷட்டரை அடைக்காமல், திறந்து இருந்த நிலையிலேயே வைத்து இருந்தனர். அவர்களிடம் இருந்த பெட்டியில் மீதம் ரூ.10 லட்சம் இருந்தது.

அப்போது 2 மர்மநபர்கள் மோட்டார்சைக்கிளில் அங்கு வந்தனர். இருவரும் தலையில் ஹெல்மெட்டும், கை உறையும் அணிந்து இருந்தனர். ஒருவர் மோட்டார்சைக்கிளில் இருக்க, மற்றொருவர் மட்டும் ஏ.டி.எம். மையத்துக்குள் சென்று, தேவராஜ் கையில் ரூ.10 லட்சம் இருந்த பெட்டியை தரும்படி கேட்டார்.

ஆனால் அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த மர்மநபர், கத்தியால் தேவராஜின் கையில் வெட்டினார். பின்னர் அவரிடம் இருந்து ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்துவிட்டு, அங்கு தயாராக நின்ற தனது கூட்டாளியுடன் மோட்டார்சைக்கிளில் ஏறி தப்பிச்சென்று விட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த தேவராஜ், முரளி இருவரும் வெளியே ஓடிவந்து கூச்சலிட்டனர். இதுபற்றி மதுரவாயல் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு துணை கமிஷனர் சுதாகர், உதவி கமிஷனர் ஜான்சுந்தர் தலைமையிலான போலீசார் விரைந்து வந்தனர். கொள்ளையன் கத்தியால் வெட்டியதில் காயம் அடைந்த தேவராஜ்க்கு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரித்தனர்.

அதில், தேவராஜ், முரளி இருவரும் நேற்று மதியம் முதல் ரூ.35 லட்சம் பணத்துடன் வடபழனி, விருகம்பாக்கம், வளசரவாக்கம், போரூர், காட்டுப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கனரா வங்கி ஏ.டி.எம்.களில் பணத்தை நிரப்பினர். பின்னர் கடைசியாக ரூ.14 லட்சம் பணத்துடன் இரவு 8.30 மணியளவில்தான் நூம்பல் பகுதியில் உள்ள இந்த ஏ.டி.எம். மையத்துக்கு வந்து பணத்தை நிரப்பினர்.

கொள்ளையர்கள் இவர்கள் இருவரையும் பின்தொடர்ந்து வந்து, பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் கொள்ளையர்கள் உருவம் மற்றும் அவர்கள் தப்பிச்சென்ற மோட்டார்சைக்கிள் எண் பதிவாகி இருந்தது. அதை வைத்து கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த கொள்ளை சம்பவத்தில் தேவராஜ், முரளி ஆகியோருக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

கொள்ளை நடந்த ஏ.டி.எம். மையம் அருகிலேயே போரூர் போலீஸ் நிலையம் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com