தட்டார்மடம் அருகே சார்பதிவாளர் அலுவலகத்தில் காதல் திருமண ஜோடி திடீர் தர்ணா

தட்டார்மடம் அருகே சார்பதிவாளர் அலுவலகத்தில் காதல் திருமண ஜோடி திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தட்டார்மடம் அருகே சார்பதிவாளர் அலுவலகத்தில் காதல் திருமண ஜோடி திடீர் தர்ணா
Published on

தட்டார்மடம்:

தட்டார்மடம் அருகே சார்பதிவாளர் அலுவலகத்தில் காதல் திருமண ஜோடி திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காதல் திருமணம்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பெரியதாழை பகுதியை சேர்ந்தவர் ஜோசி. இவர் நர்சிங் படித்து முடித்துவிட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். இவரும், அதே மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த கலைவாணன் என்பவரும் காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.

இவர்களுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 13-ந்தேதி பெண் வீட்டார் சம்மதத்துடன் பெரியதாழையில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் திருமணம் நடந்தது.

தர்ணா போராட்டம்

பின்னர் அவர்கள் திருமண சான்றிதழ் வேண்டி தட்டார்மடம் அருகே கொம்மடிக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தனர். சுமார் ஒரு மாதத்துக்கு மேலாகியும் சான்றிதழ் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று ஜோசி, கலைவாணன் இருவரும் கொம்மடிக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களுக்கு திருமண சான்றிதழ் வழங்காததால் அதை கண்டித்து திடீரென சார்பதிவாளர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் பேச்சுவார்த்தை

தகவல் அறிந்த தட்டார்மடம் போலீசார் அங்கு விரைந்து வந்து, காதல் திருமண தம்பதியை அழைத்து சமாதானம் செய்தனர். பின்னர் அவர்களை சார்பதிவாளர் சுகத்திடம் அழைத்து சென்று சான்றிதழ் வழங்குமாறு அறிவுறுத்தினர்.

அப்போது விரைவில் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சார்பதிவாளர் சுகம் உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து சென்றனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com