தேனி அருகே, அதிக வட்டி கேட்டதால்நிதி நிறுவனத்துக்குள் புகுந்து தொழிலாளி தீக்குளிக்க முயற்சி:பா.ஜ.க.வினர் ஆதரவு ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு

தேனி அருகே அதிக வட்டி கேட்டதால் நிதி நிறுவனத்துக்குள் புகுந்து தொழிலாளி தீக்குளிக்க முயன்றார். அவருக்கு ஆதரவாக பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி அருகே, அதிக வட்டி கேட்டதால்நிதி நிறுவனத்துக்குள் புகுந்து தொழிலாளி தீக்குளிக்க முயற்சி:பா.ஜ.க.வினர் ஆதரவு ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு
Published on

தீக்குளிக்க முயற்சி

தேனி அல்லிநகரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 67). கூலித்தொழிலாளி. இவர் தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் மின்வாரிய அலுவலகம் எதிரே உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்துக்கு நேற்று இரவு 9 மணி அளவில் வந்தார். பின்னர் அவர் அந்த நிதி நிறுவன அலுவலகத்துக்குள் நின்றபடி தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்தவர்கள் அவரை தடுத்து நிறுத்தினர்

தகவல் அறிந்து போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது, சுப்பிரமணி கூறுகையில், "நான் 2018-ம் ஆண்டு இந்த நிதி நிறுவனத்தில் ரூ.2 லட்சத்து 90 ஆயிரம் கடன் வாங்கினேன். வட்டியோடு ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் செலுத்தியுள்ளேன். இதுவரை 43 தவணை செலுத்தியுள்ளேன். ஆனால், 33 தவணை தான் செலுத்தியதாக ஊழியர்கள் கூறுகிறார்கள். வேறு இடங்களில் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கடன் வாங்கி இந்த கடனை அடைத்து விடலாம் என்று வந்தேன். ஆனால் மேலும் ரூ.3 லட்சம் செலுத்த வேண்டும் என்கிறார்கள். சில நாட்களாக நிதி நிறுவனத்துக்கு வந்து சென்றும் தீர்வு கிடைக்காததால் தற்கொலைக்கு முயன்றேன்" என்றார்.

பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

இதையடுத்து போலீசார் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையே தீக்குளிக்க முயன்ற சுப்பிரமணிக்கு ஆதரவாக பா.ஜ.க. மாவட்ட பொதுச் செயலாளர் மலைச்சாமி தலைமையில் நிர்வாகிகள் சிலர் அந்த நிதி நிறுவன அலுவலகத்திற்கு வந்தனர்.

அவர்கள் அங்கு நிதி நிறுவனத்தை கண்டித்து திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நிதி நிறுவன ஊழியர்களுக்கும், பா.ஜ.க.வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து பா.ஜ.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com