திருவள்ளூர் அருகே பயங்கரம்: வெடிகுண்டு வீசி 2 ரவுடிகள் படுகொலை - 6 பேர் கும்பல் வெறிச்செயல்

திருவள்ளூர் அருகே வெடிகுண்டு வீசி 2 ரவுடிகள் கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக 6 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் அருகே பயங்கரம்: வெடிகுண்டு வீசி 2 ரவுடிகள் படுகொலை - 6 பேர் கும்பல் வெறிச்செயல்
Published on

திருவள்ளூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் இருந்து நேற்று காலை 10 மணி அளவில் 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு நோக்கி சென்று கொண்டிருந்தனர். அவர்கள் திருவள்ளூரை அடுத்த பண்ணூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அவர்களை பின்தொடர்ந்து 3 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் கொண்ட கும்பல் கையில் கத்தி, அரிவாள், நாட்டு வெடிகுண்டுடன் விரட்டியது

இதை பார்த்த அவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றனர். பண்ணூர் சாலை வேகத்தடை அருகே செல்லும்போது அவர்கள் மீது மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் திடீரென நாட்டு வெடிகுண்டை வீசினார்கள்.

வெடிகுண்டு வெடித்து சிதறியதில் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து வந்தவர் கீழே விழுந்தார். அவர் முதுகில் உள்ள தசைகள் சிதைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடினார். சிறிது நேரத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றவர் படுகாயம் அடைந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார். அவரை 6 பேர் கொண்ட கும்பல் சுற்றி வளைத்து தலை, கழுத்து, மார்பு, கை கால் என சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது. பின்னர் அந்த கும்பல் அங்கு இருந்தவர்களை கத்திமுனையில் மிரட்டி 2 பெரிய கத்திகளை சாலையோரத்தில் வீசி விட்டு தப்பிச்சென்றது.

இதுகுறித்து உடனடியாக அந்த பகுதி மக்கள் மப்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் டி.ஐ.ஜி. தேன்மொழி, திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன், இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தவாறு சிறிது தூரம் ஓடிச்சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. வெடிகுண்டு நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து கொலை செய்யப்பட்ட இடத்தில் சிதறி கிடந்த வெடிகுண்டு துகள் களை சேகரித்து சென்றனர்.

இதற்கிடையே கொலையாளிகள் கண்ணன்தாங்கல் பகுதியில் செல்லும் போது அவர்களை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பிடிக்க முயன்றனர். அப்போது அவர்கள் தாங்கள் வைத்திருந்த கத்தியால் மிரட்டி விட்டு தப்பிச்சென்றனர்.

இந்த கொலை தொடர்பாக மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கிடந்த செல்போன் எண், மோட்டார் சைக்கிள் பதிவு எண்ணை வைத்து அவர்கள் நடத்திய விசாரணையில் நாட்டுவெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்ட நபர்கள் பெரிய காஞ்சீபுரம் பூக்கடைசத்திரத்தை சேர்ந்த கோபி (வயது 25) மற்றும் காஞ்சீபுரம் கைலாசநாதர் கோவில் தெருவை சேர்ந்த ஜீவா (25) என்பதும் தெரியவந்தது. அவர்கள் இருவரும் ரவுடிகள். பிரபல ரவுடியான ஸ்ரீதர் என்பவரின் நெருங்கிய நண்பர்கள் என்பதும் 2 கோஷ்டிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த கொலைகள் நடந்துள்ளதும் தெரியவந்தது.

திருவள்ளூர் அருகே பட்டப்பகலில் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேரை 6 பேர் கொண்ட கும்பல் விரட்டிச் சென்று படுகொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேரை 6 பேர் கொண்ட கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசியும், கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றவர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் குற்றவாளிகளை கைது செய்ய ஏதுவாக அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து அதில் பதிவாகியுள்ள காட்சிகளை கொண்டு குற்றவாளிகள் யார் என கண்டறியும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம். குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

6 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com