

டி.என்.பாளையம்
டி.என்.பாளையம் வனச்சரகத்துக்கு உள்பட்ட கணக்கம்பாளையம் அருகே உள்ள வனப்பகுதியில் வேதபாறை பள்ளம் கத்தாழைமடுவு என்ற இடம் உள்ளது. இந்த பகுதியில் சிலர் திருட்டுத்தனமாக சந்தன மரங்களை வெட்டி கடத்துவதாக டி.என்.பாளையம் வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்ததும் வனச்சரகர் கணேஷ் பாண்டியன் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு 6 பேர் கொண்ட கும்பல் சந்தன மரங்களை வெட்டி கட்டைகளை எடுத்து வைத்து கொண்டு இருந்ததை கண்டனர். வனத்துறையினரை கண்டதும் அந்த கும்பல் தப்பி ஓட முயன்றது.
உடனே வனத்துறையினர் அந்த கும்பலை சுற்றி வளைத்தனர். இதில் 2 பேர் பிடிபட்டனர். 4 பேர் தப்பி ஓடிவிட்டனர். பின்னர் பிடிபட்டவரிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், 'அவர்கள் கோபி அருகே உள்ள கள்ளிப்பட்டி பகவதி நகர் பகுதியை சேர்ந்த சடையன் என்பவரின் மகன் பெரியசாமி (வயது 24), மற்றொருவர் 17 வயது சிறுவன் என்பதும், அவர்கள் வனப்பகுதியில் இருந்து சந்தன மரங்களை வெட்டி கடத்த முயன்றதும்,' தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 2 பேரையும் வனத்துறையினர் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து 8 கிலோ எடையிலான சந்தன மரக்கட்டைகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் கைது செய்யப்பட்டவர்கள் கொடுத்த தகவலின் பேரில் தப்பி ஓடிய நாகராஜ், முத்து, சடையன், மாருச்சாமி ஆகியோரை வனத்துறையினர் வலைவீசி தேடி வருகிறார்கள்.