வத்தலக்குண்டு அருகே மினிலாரி - கார்கள் மோதல் ஆண்டிப்பட்டி தி.மு.க. எம்.எல்.ஏ. காயமின்றி தப்பினார்

வத்தலக்குண்டு அருகே வாழைக்காய் ஏற்றி சென்ற மினி லாரி மீது கார்கள் மோதின. இந்த விபத்தில் ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. காயமின்றி உயிர் தப்பினார்.
வத்தலக்குண்டு அருகே மினிலாரி - கார்கள் மோதல் ஆண்டிப்பட்டி தி.மு.க. எம்.எல்.ஏ. காயமின்றி தப்பினார்
Published on

வத்தலக்குண்டு,

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் மகாராஜன். இவர், ஒரு காரில் திண்டுக்கல் நோக்கி நேற்று சென்று கொண்டிருந்தார். அந்த காரை, வருசநாட்டை சேர்ந்த சிவா என்பவர் ஓட்டினார்.

வத்தலக்குண்டு அருகே பைபாஸ் சாலையில் கணவாய்ப்பட்டி பிரிவு பகுதியில் கார் சென்று கொண்டிருந்தபோது முன்னால், வாழைக்காய் ஏற்றிய மினிலாரி மற்றும் ஒரு கார் சென்று கொண்டிருந்தன. மினிலாரியை, அருப்புக்கோட்டையை சேர்ந்த மாரிமுத்து என்பவர் ஓட்டினார். காரை, தேனியை சேர்ந்த பன்னீர்செல்வம் ஓட்டினார்.

இந்தநிலையில் திடீரென அந்த மினிலாரி, வத்தலக்குண்டு சாலையில் திரும்பியது. இதனால் பின்னால் வந்த கார், எதிர்பாராதவிதமாக மினி லாரி மீது மோதியது. இதனையடுத்து அந்த காரின் பின்புறத்தில், எம்.எல்.ஏ.வின் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அவரது காரின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது.

இந்த விபத்தில் மகாராஜன் எம்.எல்.ஏ., டிரைவர் சிவா, மற்றொரு காரை ஓட்டி வந்த பன்னீர்செல்வம் ஆகியோர் காயமின்றி மயிரிழையில் உயிர் தப்பினர்.

அதேநேரத்தில் மினி லாரியில் இருந்த வாழைக்காய் சுமக்கும் தொழிலாளிகள் செல்வி, ஈஸ்வரி உள்பட 7 பேர் காயமடைந்தனர். தகவலறிந்த வத்தலக்குண்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com