

சென்னை,
கடந்த செப்.12 ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாபெரும் தடுப்பூசி முகாம் 20 லட்சம் தடுப்பூசிகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இலக்கைவிட கூடுதலாக 28 லட்சத்து 91 ஆயிரத்து 21 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இரண்டாவது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் செப்.19ஆம் தேதி 15 லட்சம் பேருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இலக்கைவிட கூடுதலாக 16 லட்சத்து 43 ஆயிரத்து 879 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.
இந்நிலையில் மூன்றாவது மாபெரும் தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் இன்று (26-9-2021) தொடங்கி நடைபெற்று வருகிறது. 20 ஆயிரம் தடுப்பூசி முகாம்கள் மூலம் 15 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில் இன்று 1,600 சிறப்பு முகாம்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தநிலையில், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது;-
தமிழகத்தில் மூன்றாவது கட்ட மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்று வருகிறது. இந்த தடுப்பூசி முகாமை பயன்படுத்தி அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். குறிப்பாக முதியோர்கள், பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டோர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.
சென்னை மாநகராட்சியில் முதியோர்களுக்கு வீட்டிற்கே சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
2020 ஆம் ஆண்டு கணக்கின்படி, தமிழகத்தின் மக்கள்தொகை 7.77 கோடி. இதில், 18 வயதுக்கு மேற்பட்டோர் 6.06 கோடி. இதில் முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 3.4 கோடி (56%). இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 1.03 கோடி (17%). முதல் தவணை போட்டுக்கொண்டவர்கள் கண்டிப்பாக இரண்டாவது தவணை ஊசி போட்டுக்கொள்ள வேண்டும்.
பூஸ்டர் டோஸ் போட வேண்டுமா என்பது குறித்து மருத்துவ ரீதியான மருத்துவர் குழுவே முடிவு செய்யும் என்றார்.